முதியோருக்கான கலாச்சார பாஸ்..!!! மரபும் புதுமையும் சந்திக்கும் வழி..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் மூத்த குடிமக்களை கலாச்சாரம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நெருக்கமாக இணைக்க, கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் (MCCY) சமூக கூட்டாளர்களுடன் இணைந்து கலாச்சார பாஸ் வழியாக குழு சுற்றுலாக்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதில்,பயனியர் ஹெல்த் கேர் குழுமம் அதிகாரிகளுடன் இணைந்து சோதனைத் திட்டத்தை முன்னெடுக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, முதியவர்கள் இந்த பாஸை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராய வான்கார்டு ஹெல்த் கேர் அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டது.
பயனியர் ஹெல்த்கேர் குழுமத்தின் ஆக்டிவ் ஏஜிங் மைய மேலாளர் சென் லைனிங்,அடுத்த மாதம் சோதனைத் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார். ஒவ்வொரு குழுவிலும் சுமார் 20 முதியவர்கள் பங்கேற்று சைனா டவுன், கேலாங் செராய்,அருங்காட்சியகங்கள் பாரம்பரிய தளங்கள் போன்ற கலாச்சார ரீதியாக வளமான இடங்களை பார்வையிடுவார்கள்.
“முதியவர்களுக்கு அதிகம் பிடிக்கும் நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்வதே எங்களின் நோக்கம். அவர்கள் பொதுவாக இசை,நடன நிகழ்ச்சிகள்,கலாச்சார தலங்கள்,கைவினை பட்டறைகள் போன்றவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதோடு,தலைமுறைகளைக் கடக்கும் வகுப்புகள் அவர்களுக்கு பிடிக்கும். மேலும் பாடிக் ஓவியம்,தேநீர் சுவைத்தல் கையெழுத்து போன்ற கலைப்பட்டறைகள் அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும்” என அவர் கூறினார்.
இந்த முயற்சியின் மூலம் முதியவர்கள் மரபுடன் மீண்டும் இணைந்து சமூகத்தில் கலந்து கொள்ளவும்,புதிய அனுபவங்களையும் திறன்களையும் கற்றுக் கொள்ளவும் வாய்ப்பு பெறுகின்றனர்.