சிங்கப்பூர் சர்வதேச காமிக்-கான் 2025 தொடங்கியது..!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சர்வதேச காமிக்-கான் (Singapore Comic-Con) நிகழ்ச்சி நேற்று(06.12.25) துவங்கியது.இதில் சர்வதேச காமிக் கலைஞர்கள், அனிமேஷன் ரசிகர்கள் மற்றும் கேமிங் ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு நிகழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு இருந்தது.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) மற்றும் சிங்கப்பூர் காவல் துறை இணைந்து, பாதுகாப்பான இணையப் பயன்பாடு மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்கும் வழிகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல்களை வழங்கின. குறிப்பாக, இளம் வயதினருக்கு ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.
இதில் கலந்து கொண்ட ஒரு பார்வையாளர், “என் 10 வயது தங்கை அடிக்கடி ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுகிறாள். அவள் அந்நியர்களுடன் தொடர்பு கொள்வதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன், ஏனெனில் சிலர் அவளை நேரில் சந்திக்க அழைக்கக்கூடும்,” என்று கூறினார். மற்றொருவர், “பெற்றோர்களாகிய நாங்கள் ஆன்லைன் விளையாட்டுகளின் தாக்கத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கண்காட்சியைப் பார்க்க வந்தோம்,” என்றார்.
இளம் விளையாட்டாளர்களுக்கான எச்சரிக்கையாக, சமூக அமைப்புகள் “விளையாட்டில் கலந்து கொள்வது சரி, ஆனால் அதற்குப் பின் தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது முக்கியம்” என்று அறிவுறுத்தின.
சிங்கப்பூர் விளையாட்டு சங்கம் தெரிவித்ததாவது, பெரும்பாலான கேமிங் நிறுவனங்கள் தற்போது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தி வருகின்றன.மேலும் விதிகளை மீறும் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்படுகின்றன.
இவ்வாண்டு காமிக்-கானில், காமிக்ஸ் மற்றும் கேமிங் உலகத்தை இணைக்கும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, இளம் தலைமுறையின் டிஜிட்டல் பாதுகாப்பையும் முன்னிறுத்தும் புதிய நோக்கமும் வலியுறுத்தப்பட்டது.