சிங்கப்பூர் பட்ஜெட் தாக்கல் 2026 குறித்த முக்கிய அப்டேட்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், வரும் பிப்ரவரி 12ஆம் தேதி (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகியதைத் தொடர்ந்து, வரவிருக்கும் பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அறிவிப்புகள் இடம்பெறப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.
வரவுசெலவுத் திட்ட உரையை பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் வாசிக்கும் போது, அது வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒலி மற்றும் ஒளிபரப்பாகும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம், வீட்டிலிருந்தே பொதுமக்கள் பட்ஜெட் அறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.
மேலும், இணையத்தை பயன்படுத்துவோருக்காக singaporebudget.gov.sg என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும் பட்ஜெட் உரை நேரடியாக ஒளிபரப்பப்படும். பட்ஜெட் தாக்கல் முடிந்த பின்னர்,அதன் முழுமையான விவரங்கள், திட்டங்கள் மற்றும் செலவினப் பிரிவுகள் அனைத்தும் அதே இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2026 வரவுசெலவுத் திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற அரசு வாய்ப்பளித்துள்ளது. ரீச் பட்ஜெட் 2026 குறுந்தளம், ரீச் சிங்கப்பூர் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கங்கள், ShareYourViews இணையப்பக்கம் ஆகியவற்றின் வழியாக ஜனவரி 12ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதாரம், வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்பு, சமூக நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு அம்சங்களில் இந்த பட்ஜெட் முக்கிய தீர்மானங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொதுமக்களின் பங்களிப்பும் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.