மார்சிலிங் காபி கடைக்குள் வந்த அழையா விருந்தாளி..!!!
சிங்கப்பூர்: மார்சிலிங் டிரைவ் பிளாக் 211-இல் உள்ள ஒரு காபி கடையில் அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பெரிய மலைப்பாம்பு ஒன்று கடைக்குள் ஊர்ந்து சென்று, தரையில் சுற்றித் திரிந்தது. இதைக் கண்ட சில வாடிக்கையாளர்கள் பயந்தபடி அலறியபடி ஓடினர்.
அந்தச் சமயத்தில், துணிச்சலான நபர் ஒருவர் பாம்பை துரத்திச் சென்று, அதன் வாலை வெறும் கைகளால் பிடித்து “சண்டை” செய்தார். சிறிது நேர போராட்டத்திற்கு பின், அவர் பாம்பை கடையிலிருந்து வெளியே இழுத்துச் சென்றார்.
வீடியோவில் பாம்பு முன் இருக்கைகளின் கீழ் ஊர்ந்து செல்வதும்,திடீரென முன்னோக்கி சென்ற அந்த நபர் வாலைப் பிடிக்க முயல்வதும் காணப்படுகிறது. பாம்பு ஒருமுறை தப்பித்தாலும், அந்த நபர் விடாமல் பின்தொடர்ந்து மீண்டும் வாலைப் பிடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
பாம்பு அதன் வாயை அகலமாகத் திறந்து “திரும்பி கடிக்க” முயன்றது. ஆனால் அந்த நபர் அமைதியாக அதை புல்வெளியில் கொண்டு சென்று விடுவித்தார். பாம்பு அங்கிருந்து ஒரு மிதிவண்டி பக்கம் ஊர்ந்து புல்லில் மறைந்தது.