சிங்கப்பூரில் வலுப்படுத்தப்படும் குழந்தை பாதுகாப்பு சட்டம்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பிள்ளைகளைக் கண்டிக்கும் நோக்கில் அவர்களை அடிப்பதோ அல்லது உடல் ரீதியான தண்டனைகள் அளிப்பதோ துன்புறுத்தலாகக் கருதப்படும் என்று சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேகன் கங் என்ற சிறுமி துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னர், பிள்ளைப் பாதுகாப்பு அமைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்று சமூகச் சேவைகள் ஒருங்கிணைப்பிற்குப் பொறுப்பான அமைச்சர் டெஸ்மண்ட் லீ நவம்பர் 5 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த விவாதத்தின் போது, துன்புறுத்தப்படும் பிள்ளைகளை எப்போது அதன் குடும்பத்திடமிருந்து பிரிக்கவேண்டும் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “பிள்ளைகளைக் கண்டிக்கவேண்டும் என்ற பெற்றோரின் நோக்கம் புரிந்துகொள்ளத்தக்கது.ஆனால் அளவுக்கு மீறிய தண்டனைகள் துன்புறுத்தலாகவே பார்க்கப்படும்,” என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது, “கண்டிக்கப்படும் பிள்ளைகளுக்குக் காயம் ஏற்பட்டால், அது துன்புறுத்தல் என்றே வகைப்படுத்தப்படும்.”
சிங்கப்பூரில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கண்டிப்பது சாதாரணம் என்று சிங்கப்பூர் பிள்ளைகள் சங்கமும் யேல்–என்யுஎஸ் கல்லூரியும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
ஆய்வில் பங்கேற்ற 750 பெற்றோரில் பாதிக்கும் அதிகமானோர், பிள்ளைகளைக் கையாலோ அல்லது பொருளாலோ அடிப்பதாக ஒப்புக்கொண்டனர்.
அமைச்சக பேச்சாளர் கூறியதாவது, பிள்ளை கடுமையான காயங்களுக்கு ஆளாகும் அளவுக்கு தண்டிக்கப்படுமானால் அது துன்புறுத்தலாகவே கருதப்படும்.
உதாரணமாக, பிள்ளையின் தோல் கிழியும் அளவுக்கு பிரம்பைப் பயன்படுத்துதல், பிள்ளையை சுவருக்கு எதிராக வலுக்கட்டாயமாகத் தள்ளுதல் போன்றவை உடல் துன்புறுத்தலாக வகைப்படுத்தப்படும்.
அமைச்சகத்தின் பேச்சாளர் மேலும் கூறினார், “இத்தகைய நடத்தை பிள்ளையின் உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் காயம் விளைவிக்கும். இத்தகைய மனத்தளவுப் பாதிப்புகள் பிள்ளைகளை எதிர்காலத்தில் ஆவேசமாகவும், அச்சுறுத்தலாகவும் மாற்றக்கூடும்.”
அவர் வலியுறுத்தியதாவது, பெற்றோர் தொடர்ந்து பிள்ளையை குற்றம் சாட்டி, மன அழுத்தத்தை ஏற்படுத்தினாலும் அதுவும் துன்புறுத்தலின் ஒரு வடிவமாகக் கருதப்படும் என்று கூறினார்.