எதிர்பார்ப்பை தாண்டிய சேவை – வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கை..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கார் மோதியதில் காயமடைந்த இந்தோனீசிய பணிப்பெண் ஒருவர், இழப்பீடு பெற என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழம்பினார். இன்னும் இரண்டு வாரங்களில் நாடு திரும்பத் திட்டமிட்டிருந்த அவர், வழக்கறிஞரைச் சந்திக்க கூட அஞ்சியிருந்தார். சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநருடன் தனிப்பட்ட முறையில் சமரசம் காண நினைத்திருந்தாலும், நியாயமான இழப்பீடு எவ்வளவு என்பது அவருக்கு தெளிவாக தெரியவில்லை.
பின்னர், வெளிநாட்டு ஊழியர்களுக்கான இலவச சட்ட உதவி மையம் குறித்து அறிந்த அவர், ஊன்றுகோல்களின் உதவியுடன் தனது முதலாளிகளுடன் அந்த மையத்திற்குச் சென்றார். அங்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு கட்டணமின்றி சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது. அந்த மையத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் நூர் சுக்ரினா சலாம் அவருக்கு உதவ முன்வந்தார்.
சட்ட ஆலோசனை பெற்ற பிறகு, பணிப்பெண்ணின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த அவரது முதலாளிகளும் தயாரானார்கள். “என்னால் இரவில் உறங்க முடியவில்லை. என் வாழ்நாளில் வழக்கறிஞரைச் சந்திப்பது இதுவே முதல்முறை,” என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சுக்ரினா,வெளிநாட்டு ஊழியர்கள் சட்ட உதவி பெறுவதால் வேலை பாதிக்கப்படும் என்ற பயத்தால் வழக்கறிஞரை அணுகத் தயங்குகிறார்கள் என்று அவர் கூறினார். அந்த தவறான எண்ணத்தை மாற்றுவதே மையத்தின் முக்கிய இலக்கு என்றார்.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கென இலவச சட்ட ஆலோசனை வழங்கும் ஒரே மையம் இதுவாகும். லிட்டில் இந்தியா வட்டாரத்தின் செராங்கூன் சாலை பகுதியில் அமைந்துள்ள இந்த மையம் வாரத்தில் ஐந்து நாட்கள் திறந்திருக்கும். வேலைத் தொடர்பான பிரச்சினைகள், குற்றவியல் விவகாரங்கள் மற்றும் பிற சட்டச் சச்சரவுகள் குறித்து அங்கு ஆலோசனை பெற முடியும்.
வெளிநாட்டு ஊழியர் நிலையம் மற்றும் இலவசச் சட்ட உதவி வழங்கும் PBSG என்னும் அறநிறுவனம் ஆகியன இணைந்து 2025 ஏப்ரலில் இந்த மையத்தை தொடங்கின.
இந்த மையம் தொடங்கியதிலிருந்து இதுவரை 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு சேவை வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டில் 120 பேருக்கு உதவ வேண்டும் என்ற இலக்கை மையம் ஏற்கனவே கடந்துவிட்டதாக இயக்குநர் மைக்கல் லிம் தெரிவித்தார்.