கடும் வெப்பத்தால் திணறும் நாடுகள்…!! ஆற்றல் பகிர்வு தான் தீர்வா..?
சிங்கப்பூர்:தென்கிழக்காசிய நாடுகள் அதிகரித்து வரும் வெப்பத்தை சமாளிக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பகிர்ந்து கொள்வது மிக அவசியம் என பருவநிலை ஆய்வாளர் வின்ஸ்டன் சோவ் எச்சரித்துள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற காப்30 மாநாட்டில் அவர் கூறியதாவது, முறையான கட்டமைப்பு இல்லாத குடியிருப்புகள் மற்றும் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவோர் அதிக அபாயத்தில் உள்ளனர் என்றார்.
புதைபடிவ எரிபொருள் மின்சாரம் குளிர்வித்தலுக்கு நீடிக்க முடியாது என்றும், குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படும் வாயுக்கள் பூமியை மேலும் வெப்பமயமாக்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாட்டுச் சுற்றுச்சூழல் திட்டத்தின் சமீபத்திய அறிக்கையில், அதிகரித்து வரும் வெப்பநிலை, மக்கள்தொகை மற்றும் குறைந்த திறன் கொண்ட குளிரூட்டும் அமைப்புகள் காரணமாக 2050ஆம் ஆண்டுக்குள் குளிர்விப்பதற்கான தேவை மும்மடங்காக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய தேவை கட்டுப்படுத்தப்படாவிட்டால் உமிழ்வுகள் இரட்டிப்பாகும் அபாயம் உள்ளதாகவும், இது மின் கட்டமைப்புகளையும் பருவநிலை இலக்குகளையும் பெரிதும் பாதிக்கும் எனவும் அறிக்கை எச்சரிக்கிறது.
தென்கிழக்காசிய நாடுகளின் சில பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் குறைவாக உள்ளன. ஆனால் சில பகுதிகள் அதிகளவு எரிசக்தி ஆதாரங்களை கொண்டுள்ளதால், அவை ஆசியானின் புதுப்பிக்கத்தக்க மின் கட்டமைப்பில் முக்கிய பங்காற்றும் என்று பேராசிரியர் வின்ஸ்டன் சோவ் கூறினார்.