சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு தொடக்கப் பள்ளி மாணவனை ஒரு இளைஞர் அணுகி, மின்-சிகரெட்டுகளை விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஃபேர்ஃபீல்ட் மெதடிஸ்ட் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், ஆங்கிலோ-சீன ஜூனியர் கல்லூரிக்கும் அருகிலுள்ள டோவர் ரைஸில் உள்ள வரிக்குதிரை கடவையில் கடந்த ஜூலை 25-ம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து டான்ஜோங் பகார் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் சின் யென், சமூக ஊடகங்களில் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் இரண்டு இளைஞர்கள் அணுகி, மின்-சிகரெட்டுகள் வாங்க விரும்புகிறீர்களா என்று கேட்டதாகத் தன்னிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஓங் சின் யென்,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிகமாக உரையாடி, இவ்வகை சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைப் பகிர வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டார்.
சந்தேகத்திற்கிடமான நடத்தைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு பொதுமக்களை அவர் ஊக்குவித்தார்.
இச்சம்பவத்தை அடுத்து ஃபேர்ஃபீல்ட் மெதடிஸ்ட் தொடக்கப்பள்ளியின் முதல்வர் ஹுவாங் மெய்ஃபெங், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகத்தைச் சுற்றி ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாணவர்கள் அந்நியர்களுடன் பேச வேண்டாம் என்றும், சந்தேகத்திற்குரிய எதையும் கண்டால் உடனடியாக அவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் பள்ளி நினைவூட்டுகிறது.
சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) மின்-சிகரெட் தவறான பயன்பாடு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக அதன் ஹாட்லைன் சேவையை (6684 2036 / 6684 2037) தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை (அரசு விடுமுறை நாட்கள் உட்பட) விரிவுபடுத்தியுள்ளது.
மக்கள் www.go.gov.sg/reportvape என்ற இணையதளத்தின் வழியாக மின்-சிகரெட் தொடர்பான குற்றங்கள் குறித்து புகாரளிக்கலாம்.