ஜோகூர் பாருவில் மின்நிலையத்தில் தீ விபத்து..!! பல பகுதிகளில் மின்தடை..இருவர் காயம்!

ஜோகூர் பாருவில் மின்நிலையத்தில் தீ விபத்து..!! பல பகுதிகளில் மின்தடை..இருவர் காயம்!

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள மின்நிலையத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தால், பல முக்கியக் குடியிருப்புப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த அக்டோபர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை, கங்கார் தெப்ராவ் பகுதியில் உள்ள மின்நிலையத்தில் தீச்சம்பவம் ஏற்பட்டது. இதனால் மாலை சுமார் 6 மணி முதல் இரவு 7:45 மணி வரை பல பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.

மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றபோது, மின்சாரம் பாய்ந்ததில் இரு மின்சார நிறுவனப் பணியாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மின்தடையால் ஜோகூர் ஜெயா, மவுன்ட் ஆஸ்டின், தாமான் கயா, உலு திராம், தாமான் எசான் ஜெயா, தாமான் தேசா தெப்ராவ் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன.

முக்கியச் சாலைச் சந்திப்புகளில் போக்குவரத்து விளக்குகள் செயலிழந்ததால், வாகனப் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.

சில இடங்களில் கைப்பேசித் தொடர்பும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மின்சார விநியோகத்தைச் சீரமைக்கத் தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாகப் பணியில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் மீண்டும் முழுமையாகச் சீரமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.