கிரேன்ஸ் மான்டெனாவில் தீ விபத்து..!!விடுதி இயக்குநர்கள் மீது குற்றவியல் விசாரணை..!!
சுவிட்சர்லாந்தின் கிரேன்ஸ் மான்டெனா நகரில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக, ஆல்பைன் ஸ்கீ சொகுசு விடுதியை நடத்தி வந்த இரு இயக்குநர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்ததுடன், 119 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் பதின்ம வயதினராக இருப்பதாகவும், சிலரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், கவனக்குறைவினால் மரணம் ஏற்படுத்தியது, உடல் காயம் விளைவித்தது மற்றும் பேரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்துக்கு காரணமாக இருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் விடுதி இயக்குநர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து, ஜனவரி 2ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தற்போதைய தலையாய முன்னுரிமை காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவச் சேவையை வழங்குவதும், உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதும்தான் என சுவிஸ் நீதி அமைச்சர் பீட் ஜான்ஸ் தெரிவித்துள்ளார்.அவர், சட்ட அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைகளில் அரசாங்கத்திற்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக கூறியதுடன்,விசாரணை காரணமாக கூடுதல் விவரங்களை வெளியிட மறுத்துள்ளார்.