H1B விசா உயர்வு...!!!திறமையாளர்கள் உற்றுநோக்கும் அடுத்த நாடு..??
சிங்கப்பூர்:அமெரிக்கா உயர் திறமை வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான H-1B விசாவிற்கான வருடாந்திர கட்டணம் 100,000 அமெரிக்க டாலராக உயர்த்தியுள்ளது.
இதுவரை லாட்டரி முறையில் வழங்கப்பட்ட வீசா இனி அதிக ஊதியம் மற்றும் கட்டணம் செலுத்தும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த மாற்றம் சிறிய நிறுவனங்களுக்கும் சில தொழிலாளர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.இதனால் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை நிலையானதல்ல என்ற எண்ணம் உருவாகி திறமைகள் பிற நாடுகளுக்கு மாற வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில் சிங்கப்பூர் போன்ற நாடுகள் அதிக போட்டித்தன்மை பெறக்கூடும். சிங்கப்பூரில் ONE Pass என்ற திட்டம் மூலம் ஐந்து ஆண்டு வேலை அனுமதியும் குடும்பத்தாருக்கான அனுமதியும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற கொள்கைகள் உலகத் திறமைகளை ஈர்க்கும் வகையில் உள்ளது.
அமெரிக்காவின் இந்த உயர் கட்டணத் திட்டம் குடியேற்றக் கொள்கையை திறமை அடிப்படையில் அல்லாது பணம் அடிப்படையில் மாற்றுகிறது என்பதே முக்கியமான விமர்சனம்.
பெரும் நிறுவனங்கள் இத்தகைய கட்டணத்தை ஏற்றுக்கொள்ளக்கூடும் ஆனால் நடுத்தர நிறுவனங்களும் தனிநபர்களும் பின்தங்க வாய்ப்பு அதிகம். இதனால் குடியேற்றத்தில் பல்வகைத் தன்மை குறையக்கூடும். மேலும் அமெரிக்காவின் கொள்கைகள் அடிக்கடி மாறுவதால் அது நம்பகத்தன்மையை இழக்கக்கூடும்.
இதேசமயம் சிங்கப்பூர்,கனடா,இங்கிலாந்து போன்ற நாடுகள் தெளிவான குறைந்த செலவுள்ள வீசா கொள்கைகளை பின்பற்றுவதால் திறமைகள் மற்ற நாடுகளை நோக்கி திரும்பக்கூடும். இருப்பினும் அமெரிக்காவின் பெரிய சந்தை உயர்தர ஆராய்ச்சி நிறுவனங்கள் தொழில்நுட்ப சூழல் போன்ற ஈர்ப்புகள் குறையவில்லை. எனினும் இத்தகைய கொள்கை மாற்றங்கள் சில திறமைகளை மாற்று நாடுகளை நோக்கி செல்லத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.