உங்கள் பெயரில் எத்தனை சிம்..? இனி ஒரு கிளிக்கில் தெரியும்..!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தற்போது ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாகி வருகிறது. இதன் மூலம் மக்கள் தங்களுடைய பெயரில் எத்தனை சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை விரைவில் காண முடியும். புதிய முறையின் நோக்கம் மோசடிகளை தடுப்பதே ஆகும்.
இந்த புதிய தளம், ‘சிம்கார்ட்ஹவ்மெனி’ என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும், அரசாங்கத்தின் தொழில்நுட்ப அமைப்பான கவ்டெக்கும் இணைந்து இதை உருவாக்குகின்றன. இது சட்டவிரோத பங்குகளுக்காக வங்கிக் கணக்குகளை திறக்கும் மோசடிகளை முறியடிக்க உதவும்.
இந்தத் திட்டத்தின் மூலம், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களிலும் ஒருவருக்கு பின் கட்டணம் செலுத்தப்படும் பத்து சிம் அட்டைகள் வரை வைத்திருக்க முடியும் என்ற கட்டுப்பாடு பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த கட்டுப்பாடு பிப்ரவரி 28 முதல் நடைமுறைக்கு வருகிறது.
சிம் அட்டைகளை சட்டவிரோதமாக வாங்குவதையும் பயன்படுத்துவதையும் குறைக்கவும், அதே நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது வணிக நோக்கங்களுக்காக அதிக எண்ணிக்கையிலான சிம் அட்டைகள் தேவைப்படுவோரின் நியாயமான தேவையை பூர்த்தி செய்யவும் புதிய தளம் உதவும்.
சிம்கார்ட்ஹவ்மெனி தளத்தில், பயனர்கள் தங்களுடைய சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மின்னஞ்சல் முகவரியும் கொடுத்து, பதிவு செய்யப்பட்டுள்ள சிம் அட்டைகளின் எண்ணிக்கை மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.
மேலும் பொதுமக்களின் கருத்துகளைப் பொறுத்து புதிய தளம் மேம்படுத்தப்பட உள்ளதாக ஆணையம் தெரிவித்தது. மோசடியாக சிம் அட்டைகள் பதிவு செய்யப்படுவதை கண்டால் உடனடியாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்க ஸ்கேம்ஷீல்ட் செயலியை பயன்படுத்தலாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.