சிங்கப்பூர்: கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் நடைபெற்ற பராமரிப்பு மற்றும் இணைப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதால், இன்று(08.12.25)முதல் அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம்போல இயங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது.
புதிய East Coast Integrated Depot பணிமனையை ரயில் பாதையுடன் இணைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இப்போது அந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது.
LTA தனது அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில்,”திட்டமிட்டதைவிட ஒரு நாள் முன்னதாகவே பணி முடிந்துள்ளது. இன்று முதல் அனைத்து ரயில் சேவைகளும் மீண்டும் வழக்கநிலைக்கு திரும்பும்” என்று தெரிவித்துள்ளது.
இதனால், பயணிகள் இனி எந்தவித இடையூறும் இல்லாமல் தங்கள் வழக்கமான பயணங்களை மேற்கொள்ளலாம். மேலும், புதிய பராமரிப்பு வசதிகளால் ரயில் சேவைகள் இன்னும் நம்பகத்தன்மையுடன் மற்றும் சீராக இயங்கும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.