உட்புற ஸ்கைடைவிங்கில் புரட்சி — பிரபல பிராண்டின் மாபெரும் நிதி உதவி அறிவிப்பு..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உட்புற ஸ்கைடைவிங் விளையாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவும், பின்தங்கிய குழுக்களுக்கு இந்த அனுபவத்தை வழங்கவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 1 மில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்வதாக உள்ளூர் உட்புற ஸ்கைடைவிங் பிராண்டான AltitudeX அறிவித்துள்ளது.
இந்த தொகையில், S$600,000 அடுத்த தலைமுறை உள்ளூர் ஸ்கைடைவர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்கவும், அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் $450,000, SG Enable உடன் இணைந்து பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகள் மற்றும் ஊனமுற்ற இளைஞர்களுக்கு உட்புற ஸ்கைடைவிங் அனுபவத்தை வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது.
இது AltitudeX நிறுவனத்தின் இதுவரை மிகப் பெரிய சமூகப் பொறுப்பு திட்டமாகும். iFly Singapore நிறுவனத்திலிருந்து AltitudeX என பெயர் மாற்றத்தை செய்த பின்னர், இந்த புதிய முயற்சி பிராண்டின் அதிகாரப்பூர்வ அறிமுகத்தையும் குறிக்கிறது.
பிராண்டு அறிமுகத்தை நினைவுகூரும் வகையில், “ஒரு மணி நேரத்தில் தொடர்ச்சியாக அதிக உட்புற ஸ்கைடைவிங் முயற்சிகள்” என்ற உலக சாதனையை உடைக்க AltitudeX ஒரு பெரும் சவாலையும் நடத்தியது. உலகச் சாதனையை முறியடித்த 358 பங்கேற்பாளர்கள் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் துறை அமைச்சர் லியோங் சுன் வாய், மற்றும் New Concord அமைப்பின் உதவியுடன் பல குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களும் கலந்து கொண்டனர்.