வருமானத்தை மறைத்த தொழிலதிபர்..!!2020–2024 வரி விசாரணையில் அதிர்ச்சி..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 27 வயதான பிரமிட் (Pyramid) திட்ட தொழிலதிபர் ஒருவர் தனது வருமானத்தை தவறாக அறிவித்து, மொத்தம் S$370,000 க்கும் அதிகமான வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
உள்நாட்டு வருவாய் வாரியம் (IRB) வெளியிட்ட அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் ஜெனீவ் சோங் ஜியா லிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 2021 மற்றும் 2022 மதிப்பீட்டு ஆண்டுகளில் தனது வருமானத்தை குறைவாகக் காட்டியதாகவும், இதன் விளைவாக மொத்தம் S$371,859 வரி குறைவாக செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதே ஆண்டுகளில் தனது வணிகச் செலவுகளைப் பொய்யாகக் கூறி,வரி அதிகாரிகளுக்கு தவறான ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
IRB அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது,2020 முதல் 2024 வரை, பல நிலை சந்தைப்படுத்தல் (MLM) துறையில் ஈடுபட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட முகவர்கள் வருமான விவரங்களில் ஏற்பட்ட சந்தேகத்தினால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.