இளைஞர்களின் எதிர்காலத்துக்காக SP குழுமம் எடுத்த அற்புத முயற்சி..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் எரிசக்தி நிறுவனமான SP குழுமம், சமூகத்தில் பின்தங்கிய இளைஞர்களை மீண்டும் நல்வழியில் கொண்டு வர உதவும் Youth Guidance System (YGOS) அமைப்பிற்கு $850,000 நன்கொடை வழங்கியுள்ளது.
இந்த திட்டம், கல்வி, வேலை அல்லது பயிற்சியில் ஈடுபடாத சுமார் 17,000 இளைஞர்களை சமூகத்தில் மீண்டும் இணைக்கச் செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.
SP குழுமத்தின் தகவல் தொடர்பு துணைத் தலைவர் சென் ஜிலிங் தெரிவித்ததாவது, “இந்த நிதி இளைஞர் ஆலோசகர்களை உருவாக்கவும், தடுப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சமூக மொபைல் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும்.”
இத்திட்டத்தில் தன்னார்வலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 18 வயதான ஜெங் வெய்சுவான், “இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கஷ்டப்படுகிறார்கள்; அவர்களுக்கு நம்பிக்கையுடன் பேச வழிகாட்டுகிறேன்,” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் 120க்கும் மேற்பட்ட இளைஞர்களும் சமூக கூட்டாளிகளும் பங்கேற்றனர். மல்டிபிளேயர் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் இளைஞர்களிடையே தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் சமூக இணைப்பு வளர்க்கப்பட்டது.