சிங்கப்பூரில் டேசர் அதிர்ச்சி..!! ரோந்து பணியில் இருந்த காவலருக்கு என்ன நடந்தது..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சட்டவிரோதமாக கரம்பிட் (வளைந்த நகம் போன்ற கத்தி) வைத்திருந்ததற்கும், காவல் அதிகாரியை மிரட்டியதற்கும் 37 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையின் தகவலின்படி, நேற்று (27.10.25) அதிகாலை 2.30 மணியளவில் பெடோக் தெற்கு அவென்யூ 2-ல் ரோந்துப்பணியில் இருந்த அதிகாரிகள், பிளாக் 12 அருகே ஒரு கார் நிறுத்தப்பட்டிருப்பதை கவனித்தனர்.
அவர்கள் ஓட்டுநரை விசாரிக்க முயன்றபோது, அந்த நபர் பதற்றமடைந்து, நகத்தால் ஆன கத்தியை தனது கழுத்தில் வைத்துக்கொண்டு அதிகாரிகளை நோக்கி காட்டியதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் பலமுறை கத்தியை கீழே வைக்குமாறு கூறியபோதும், அவர் மறுத்ததாகவும், பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த டேசர்( மின்சார அதிர்ச்சி துப்பாக்கி) பயன்படுத்தி கைது செய்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த நபர் மீது இன்று (28.10.25) இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பொது ஊழியரின் கடமையை தடுக்க குற்றவியல் வன்முறையைப் பயன்படுத்தியதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். சட்டவிரோதமான ஆயுதம் வைத்திருந்ததற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 36 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் $40,000 அபராதம் விதிக்கப்படலாம்.