சிங்கப்பூர்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ஏழு கார்களின் டயர் வால்வுகளில் வெண்டைக்காயை திணித்து காற்றை வெளியேற்றியதற்காக நீதிமன்றத்தால் S$3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
24 வயதான பெஞ்சமின் சியா யிட் லூங் என்ற மாணவர், தேசிய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் பயின்று வருகிறார். அவர் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஆர்வம் கொண்டவர் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இணையத்தில் SUV வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்த தகவலைக் கண்ட அவர், அதில் கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வுட்லேண்ட்ஸ் டிரைவ் 14 பகுதியில் உள்ள இரண்டு அடுக்குமாடி கார் நிறுத்துமிடங்களுக்கு சென்றார். அங்கு ஏழு SUV வாகனங்களின் டயர் வால்வுகளைத் திறந்து, அதில் வெண்டைக்காயை நுழைத்து, மூடியுள்ளார். பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களையும் வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டியுள்ளார்.
அவரது வழக்கறிஞர், அவரது செயல் வன்முறையற்றது மற்றும் சட்டவிரோதமானது என அவர் நினைக்கவில்லை” என வாதிட்டார். கைது செய்யப்பட்ட பிறகு, அவர் மனநல சிகிச்சை பெற்று, பாதிக்கப்பட்டவர்களிடம் வருந்தியும் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு மாணவர் மீது தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.