தேசத் தந்தையின் இல்லத்திற்கு கிடைத்த மாபெரும் அந்தஸ்து..!!!

தேசத் தந்தையின் இல்லத்திற்கு கிடைத்த மாபெரும் அந்தஸ்து..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்ற 38 ஆக்ஸ்லி ரோடு இல்லம், இன்று(13.12.25)முதல் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தேசத் தந்தை எனப் போற்றப்படும் லீ குவான் யூ நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த இந்த இல்லம், சிங்கப்பூர் ஒரு சிறிய துறைமுக நகரிலிருந்து உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக வளர்ந்த பயணத்தின் பல முக்கிய அரசியல் மற்றும் கொள்கை முடிவுகள் உருவான இடமாக விளங்குகிறது.

 

ஆர்ச்சர்ட் ரோடு பகுதியில் அமைந்துள்ள இந்த இல்லம், லீ குவான் யூவின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்லாமல், சிங்கப்பூரின் அரசியல் மாற்றங்கள், சுயநிறைவு கொள்கைகள், தேசிய அடையாள உருவாக்கம் மற்றும் ஆட்சி நிர்வாகத்தின் அடித்தளங்கள் உருவான காலகட்டத்தையும் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சாட்சியாக கருதப்படுகிறது.

அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 38 ஆக்ஸ்லி ரோடு 77-வது தேசிய நினைவுச் சின்னம் என்ற பெருமையைப் பெறுகிறது. இது சிங்கப்பூரின் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் எதிர்கால தலைமுறைகளுக்காக பாதுகாக்கும் முயற்சியில் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, 38 ஆக்ஸ்லி ரோடு இல்லம் புதிய தேசிய பாரம்பரிய வகைப்பாடு என்ற புதிய பிரிவின் கீழ் சேர்க்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.இதன் அடிப்படையில் நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகளில் புதிய வகை விதிமுறைகள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த புதிய வகைப்பாட்டின் கீழ், கட்டடத்தின் கட்டமைப்பு, உள் வடிவமைப்பு, வரலாற்று ஆவணங்கள் மற்றும் நினைவுப் பொருட்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்பதுடன், பொதுமக்கள் அணுகல், கல்வி மற்றும் ஆராய்ச்சி பயன்பாடுகள் முறையாக ஒழுங்குபடுத்தப்படும் என அதிகாரிகள் விளக்கினர்.

இதன் மூலம், 38 ஆக்ஸ்லி ரோடு ஒரு சாதாரண நினைவுச் சின்னமாக மட்டுமல்லாமல், சிங்கப்பூரின் அரசியல் மற்றும் தேசிய வளர்ச்சியை எடுத்துக்காட்டும் உயிரோட்டமான பாரம்பரிய மையமாக நீடித்து நிலைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK