சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தனது காதலி இறந்த நிலையில் கண்டும், காவல்துறையிடம் தகவல் தெரிவிக்காமல் விட்ட நபருக்கு சிங்கப்பூர் மாநில நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இந்த சம்பவம் 2024 ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது. 34 வயதான ஜேசன் ஹாங் கை கி, தனது 33 வயது காதலியை ஹௌகாங் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டார். அவர் அதிர்ச்சியடைந்ததுடன், அங்கிருந்து தன் தனிப்பட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது. அவர் காவல்துறையையோ மருத்துவ சேவையையோ தொடர்பு கொள்ளவில்லை.
மரணமடைந்த பெண் விவாகரத்து செய்யப்பட்டவர். மேலும் இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆவார்.அவரது சகோதரிக்கும் பிரதிவாதிக்கும் அந்த வீட்டிற்குள் நுழையும் அனுமதி இருந்தது.இச்சம்பவத்துக்குப் பிறகு, பிரதிவாதி இறந்தவரின் சகோதரிக்கு சில குறுஞ்செய்திகள் அனுப்பியிருந்தாலும், அவர் நேரடியாக எதுவும் விளக்கவில்லை. இதனால் சகோதரி சந்தேகப்படாமல் விட்டார்.
நான்கு நாட்கள் கழித்து, ஏப்ரல் 27 அன்று சகோதரி குழந்தைகளுடன் வீட்டிற்கு வந்தபோது, தன் தங்கையின் உடல் படுக்கையில் சிதைவடைந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் அவர் பல நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக அறிவித்தனர். சிதைவு ஏற்பட்டதால் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஜேசன் ஹாங் கை கிக்கு போக்குவரத்துச் சட்டங்களையும் மீறிய குற்றச்சாட்டுகள் இருந்தன. 2022 ஜனவரியில் உரிமம் இடைநிறுத்தப்பட்டிருந்தபோதும், அவர் காரை ஓட்டி டாக்ஸியுடன் மோதியிருந்தார். விபத்துக்குப் பிறகு அவர் தவறான அடையாளத்தை வழங்கி, நண்பர்களிடம் பொய்யான வாக்குமூலங்களை அளிக்கச் செய்தார். பின்னர் டாக்ஸி ஓட்டுநரின் வீடியோ காட்சியால் அவரது பொய்கள் வெளிச்சத்துக்கு வந்தது.
நீதிமன்றம் இந்த வழக்கில், ஒருவரின் மரணத்தைப் புகாரளிக்காதது சமூகப் பொறுப்பை மீறிய செயல் எனக் குறிப்பிட்டது. இதனால் பிரதிவாதிக்கு மூன்று மாதங்கள் மற்றும் ஒரு வாரம் சிறைத்தண்டனையும்,S$1000 அபராதமும், மேலும் ஒரு ஆண்டிற்கு வாகன ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.