பொதுமக்களுக்கு அனுமதி...!!!இயல்பு நிலைக்கு திரும்பிய துவாஸ் கடல் நீர்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் கடந்த வாரம் வேதியியல் விபத்து ஏற்பட்டது.
இதனால் நீரில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் தரம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) தெரிவித்துள்ளது.
ஜூலை 24ஆம் தேதி, துவாஸ் இரண்டாவது இணைப்புப் பாலத்தில் நிகழ்ந்த ஒரு போக்குவரத்து விபத்தில், புரோப்பிலீன் கிளைகோல் என்ற வேதியியல் திரவத்தை ஏற்றிச் சென்ற கொள்கலன் கடலில் தவறி விழுந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அருகிலுள்ள கடல்நீரில் அந்த வேதிப்பொருள் கலந்திருப்பதற்கான சாத்தியம் குறித்து அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
NEA வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடைசி சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நீர்தர சோதனைகள், புரோப்பிலீன் கிளைகோலின் செறிவு மிகவும் குறைவாகவும், நீரின் தரம் சிங்கப்பூர் சுற்றுச்சூழல் தரநிலைகளுக்குள் இருக்கின்றதாகவும் உறுதி செய்துள்ளன.
இதையடுத்து, பொதுமக்கள் மீண்டும் பொழுதுபோக்கு தண்ணீர் நடவடிக்கைகள் மற்றும் மீன்பிடியில் ஈடுபடலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும், உணவு பாதுகாப்பு நிறுவனம் (SFA), உள்ளூர் மீன்வளத்துடன் நெருக்கமான தொடர்பில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகிறது.
தற்போது, மீன்பிடித் தொழில்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.சந்தைகளில் கிடைக்கும் மீன்கள் அனைத்தும் சாப்பிட பாதுகாப்பானவை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேபோல், பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB), உப்புநீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்களின் நீர் உட்கொள்ளல் செயல்முறைகளையும் கண்காணித்து வருகிறது. இதுவரை எந்தவொரு பாதிப்பும் காணப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.