அமெரிக்காவின் புதிய வரித்திட்டத்தால் சிங்கப்பூருக்கு ஏற்படும் விளைவு..?
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள 10 விழுக்காடு உலகளாவிய வரி விதிப்பால், சிங்கப்பூர் மீது அமெரிக்கா விதிக்கும் வரிகளில் பெரிதான மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சிங்கப்பூர் 10 விழுக்காடு அடிப்படை வரிக்குள் உள்ளதால் நிலைமை தொடர்ந்து நிலையானதாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.
வெள்ளிக்கிழமை (20.02.26) அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் அதிபர் தனிப்பட்ட முறையில் வரிகளை விதிக்கும் அதிகாரம் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து திரு.டிரம்ப் மீண்டும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி புதிய சர்வதேச வரிகளை அறிவிக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வர்த்தக நிபுணரும் ஆசிய சமூகக் கொள்கைக் கழகத்தின் துணைத் தலைவருமான வெண்டி கட்லர், “சிங்கப்பூர் ஏற்கனவே 10 விழுக்காடு வரிக்குள் உள்ளதால் சூழல் பெரிதாக மாறாது” என்று தெரிவித்துள்ளார்.
அடிப்படை வரிகளைத் தவிர, மருந்துகள் மற்றும் பகுதிமின்கடத்திகள் போன்ற சில துறைகளுக்கு தனித்தனி வரி விதிப்புகள் அமலில் உள்ளன. சிங்கப்பூர் அமெரிக்காவிற்கு அதிகளவில் பகுதிமின்கடத்திகளை ஏற்றுமதி செய்கிறது. அவற்றில் பெரும்பாலானவை தரவக மையங்கள், ஆராய்ச்சி மற்றும் நுகர்வோர் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் அதிக வரி விதிப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.
ஆனால், சிங்கப்பூரின் மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு விற்கும் பெயர்ப் பதிக்கப்பட்ட மருந்துகள் மீது 100 விழுக்காடு வரையிலான உயர்ந்த வரி சுமையை எதிர்கொள்ளும் நிலை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.