இனி எல்லை தாண்டிய பயண கட்டணங்கள் குறைய வாய்ப்பு..!!!
சிங்கப்பூர்:ஜோகூர் பாரு–சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு (RTS Link) இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த MRT சேவை செயல்பாட்டுக்கு வந்தால், உட்லேண்ட்ஸ் மற்றும் துவாஸ் எல்லைக் கடவைகளில் போக்குவரத்து சுமார் 25 சதவீதம் வரை குறையக்கூடும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இதன் மூலம், நீண்ட காலமாக பயணிகளை அவதிப்படுத்தி வந்த எல்லை நெரிசல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்தை நம்பி வாழும் சில தனியார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு, இந்த புதிய MRT சேவை சவாலாக அமையக்கூடும் என்ற கவலை உள்ளது.
குறிப்பாக, சிங்கப்பூர்–ஜோகூர் பாரு இடையே தினசரி பயணிக்கும் பயணிகளை ஏற்றிச் செல்லும் டாக்ஸி மற்றும் தனியார் வாகன சேவைகள் மீது தாக்கம் ஏற்படலாம் என அவர்கள் கருதுகின்றனர்.இதையடுத்து, வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், போட்டியில் நிலைத்திருக்கவும், எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்து நிறுவனங்கள் கட்டணக் குறைப்பை பரிசீலித்து வருகின்றன.
சிங்கப்பூர் கேப் புக்கிங் நிறுவனத்தின் நிறுவனர் ஃபரித் கான், ஜோகூர் பாரு–சிங்கப்பூர் MRT திறப்பை முன்னிட்டு தங்கள் வணிகத் திட்டங்களை ஏற்கனவே மாற்றி அமைத்து வருவதாக தெரிவித்தார். அவரது நிறுவனத்தில், எல்லை தாண்டிய பயணிகள் சேவைக்கான கட்டணங்களை 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஏழு இருக்கைகள் கொண்ட செடானுக்கான தற்போதைய கட்டணம் S$180 முதல் S$200 வரை உள்ள நிலையில், அதை சுமார் S$150 அளவிற்கு குறைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் MRT சேவை தொடங்குவதால் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கான தேவை சற்று குறையலாம் என்றாலும், பாயிண்ட்-டு-பாயிண்ட் பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் சேவைகளை விரும்பும் பயணிகள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்பதால், ஆறு மாதங்களுக்குள் வணிகம் மீண்டும் மேம்படும் என்ற நம்பிக்கையும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் நிறைவு பெறவுள்ள ஜோகூர் பாரு–சிங்கப்பூர் MRT திட்டமும், ஜோகூர் பாரு–சிங்கப்பூர் பொருளாதார மண்டலமும், நீண்ட காலத்தில் எல்லை தாண்டிய போக்குவரத்து மற்றும் தொடர்புடைய வணிகங்களுக்கு நல்ல பலனை அளிக்கும் என்றும் போக்குவரத்து துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.