பயணிகள் பதற்றம்..! சொகுசு கப்பலில் திடீர் தீ விபத்து..!!
லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட “வேர்ல்ட் லெகசி” என்ற பயணிகள் கப்பல் இன்று(20.02.26) அதிகாலை 4 மணியளவில் சிங்கப்பூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது.இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒரு பணியாளர் உயிரிழந்தார்.
சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, கப்பலில் மொத்தம் 388 பணியாளர்கள் இருந்தனர்.இவர்களில் யாரும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் அல்ல. 224 பயணிகளில் 185 பேர் சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர். இச்சம்பவத்தில் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.மற்றவர்கள் அனைவரும் காயமின்றி பாதுகாப்பாக உள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டதும் கப்பல் குழுவினரால் தீயானது விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது கப்பல் ராஃபிள்ஸ் ரிசர்வ் நங்கூரப் பகுதியில் நிலையான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. ரோந்து படகுகள், காவல்துறை கடலோரப் பாதுகாப்புப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் கடல்சார் பிரிவு ஆகியவை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன.
இந்த சம்பவம் குறித்து கப்பல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு, அதிகாரிகளின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே தங்களின் முதல் முன்னுரிமை எனவும் தெரிவித்துள்ளது.