சிங்கப்பூர் HDB குடியிருப்பு பகுதிக்கு வந்த அரிய விருந்தாளி – இணையத்தில் வைரல்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள ஒரு HDB குடியிருப்பு பகுதியில் அரிதாகவே காணப்படும் புனுகுப் பூனை தென்பட்டது.
ஒரு குடியிருப்பாளர் தனது வீட்டின் கீழே அந்த புனுகுப் பூனையை கண்டதும் உடனே வீடியோ எடுத்து “என் வீட்டின் கீழே இந்த அழகான பையனை பாருங்கள்” என்ற தலைப்பில் Facebook குழுவில் பதிவிட்டார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அந்த வீடியோவில், புனுகுப்பூனை தரையில் குனிந்து அமர்ந்திருக்கிறது.கேமரா அருகே சென்றதும் ஒரு மூலையில் ஒளிந்து கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இதுவரை அந்த வீடியோ 1,100-க்கும் மேற்பட்ட “லைக்”குகளைப் பெற்றுள்ளது.
சிலர் இந்த புனுகுப் பூனையின் அழகைக் கண்டு ரசித்தபோதும், மற்றவர்கள் “காட்டு விலங்குகளிடமிருந்து தூரமாக இருப்பது நல்லது.அவை ஆபத்தாக இருக்கலாம்” என்று எச்சரித்தனர்.
மற்றொரு இணையவாசி, “ஒருமுறை ஜகார்த்தாவில் இவை செல்லப்பிராணிகளாக விற்கப்பட்டதைப் பார்த்தேன்.நான் ஒன்றை எடுத்துச் செல்லமாக தடவியபோது அது என் விரலை கடித்தது. மேலும் என் விரலை விடுவிக்க நான் நீண்ட நேரம் போராடினேன்.!” என்று தனது மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் சிலர் இந்தப் புனுகுப் பூனையை செல்லப்பிராணியாக வளர்க்கலாமா என்று கேள்வி கேட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் புனுகுப் பூனைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது சட்டவிரோதமாகும்.வனவிலங்கு மற்றும் பறவைகள் சட்டத்தின் கீழ், உரிமம் இன்றி காட்டு விலங்குகளை வைத்திருப்பவர்களுக்கு $1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.