சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு புதிய அப்டேட்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 15) முதல், Class 3 மற்றும் Class 3A ஓட்டுநர் உரிமம் கொண்டவர்கள், அதிகபட்சம் 3,000 கிலோ வெற்று நிகர எடை கொண்ட மின்சார இலகுரக லாரிகள் மற்றும் மின்சார மினிபஸ்களை ஓட்ட அனுமதி பெறுவார்கள்.
2040ஆம் ஆண்டுக்குள் சுத்தமான எரிசக்தி வாகனங்களுக்கு நாடு முழுவதும் மாற்றம் செய்யும் தேசிய இலக்கை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்போதைய விதிகளின்படி, Class 3 / 3A உரிமையாளர்கள், குறைந்தபட்சம் 2,500 கிலோ எடையுள்ள உள் எரிபொருள் (ICE) லாரிகள் மற்றும் மினிபஸ்களை மட்டுமே ஓட்ட முடியும். இதை விட அதிக எடையுள்ள வாகனங்களுக்கு Class 4 அல்லது 4P உரிமம் அவசியமாகிறது.
ஆனால் மதிப்பீட்டுக்குப் பிறகு, அதிகபட்சம் 3,000 கிலோ எடை கொண்ட மின்சார லாரி மற்றும் மினிபஸ்கள், 2,500 கிலோ எடையுள்ள ICE வாகனங்களின் கையாளும் பண்புகளுக்கு ஒத்ததாக இருப்பதால், Class 3 / 3A உரிமையாளர்கள் இவற்றை பாதுகாப்பாக இயக்க முடியும் என போக்குவரத்து போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த மாற்றம் அடுத்த திங்கட்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து, சட்ட திருத்தங்கள் மற்றும் அமைப்பு மேம்பாடுகள் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும்.
உள் எரிபொருள் வாகனங்களுக்கான 2,500 கிலோ எடை வரம்பு மாறாமல் தொடரும். மேலும் அந்த வரம்பை மீறும் வாகனங்களை இயக்க Class 4 / 4P உரிமை இன்னும் தேவை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.