ராணுவ அதிகாரி கேட்ட ஒரு கேள்வி..!! இன்று 100 நாடுகளில் கலக்கும் ‘சிக்கன் 65’ பிறந்த கதை..!!

ராணுவ அதிகாரி கேட்ட ஒரு கேள்வி..!! இன்று 100 நாடுகளில் கலக்கும் 'சிக்கன் 65' பிறந்த கதை..!!

இன்று இந்தியாவின் எந்த அசைவ உணவகத்திற்குச் சென்றாலும் ‘சிக்கன் 65’ இல்லாத மெனு அரிது. காரம், மணம், மொறுமொறு சுவை என உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற இந்த உணவு, எப்படி உருவானது தெரியுமா? அதன் பின்னால் ஒரு சுவாரசியமான மெட்ராஸ் கதை இருக்கிறது.

1965-ம் ஆண்டு ஜனவரி 1, அன்றைய மெட்ராஸ் நகரின் மவுண்ட் ரோடு (இன்றைய அண்ணா சாலை) வழக்கம்போல பரபரப்பாக இருந்தது.

அந்த சாலையில் இருந்த ஒரு பிரபல ஓட்டலில், ஆங்கிலேய அதிகாரிகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பலரும் உணவு அருந்த வந்துகொண்டிருந்தனர். அந்த காலகட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் போரின் தாக்கம் நிலவியதால், ராணுவ அதிகாரிகளும் அடிக்கடி அங்கு வருவார்கள். அப்படிப் புத்தாண்டு நாளில் ஒரு ராணுவ அதிகாரி சில வீரர்களுடன் அந்த ஓட்டலுக்கு வந்திருந்தார்.

வழக்கம்போல உணவை ஆர்டர் செய்த அவர், ஓட்டல் உரிமையாளரிடம், “புத்தாண்டு ஸ்பெஷலாக புதுசா ஏதாவது இருக்கா?” என்று கேட்டிருக்கிறார்.
அந்த கேள்வியின் பின்னாலில் உலகப்புகழ் பெற்ற ‘சிக்கன் 65’ உருவாக காரணமானது.
சமையலறைக்குள் சென்ற ஓட்டல் உரிமையாளர் ஏ.எம்.புகாரி, புதிதாக ஏதாவது செய்ய யோசித்தார்.

அப்போது பிரியாணிக்காக தயார் செய்யப்பட்டிருந்த சிறிய சிக்கன் துண்டுகள் அவரது கவனத்திற்கு வந்தன. உடனே, இஞ்சி-பூண்டு விழுது, தயிர், எலுமிச்சைச் சாறு, சிவப்பு மிளகாய்த்தூள் உள்ளிட்ட மசாலாக்களுடன் சிக்கனை கலந்து, கொதிக்கும் எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்தார்.

சில நிமிடங்களில் காரமணம் வீசும் அந்த புதிய உணவு ராணுவ அதிகாரியின் முன் வைக்கப்பட்டது. முதல் துண்டை சுவைத்தவுடன் அவர் ஆச்சரியப்பட்டு, “வாவ்… அருமையான சுவை! இதற்கு என்ன பெயர்?” என்று கேட்டாராம்.

அப்போது புத்திசாலித்தனமாக, அது உருவான ஆண்டு 1965 என்பதை குறிப்பிட்டு, ஓட்டல் உரிமையாளர் அதற்கு ‘சிக்கன் 65’ என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது.

அதன்பின் மெட்ராஸில் அந்த உணவு மிக வேகமாக பிரபலமானது. மக்கள் அதை வெறும் ‘ஸ்டார்ட்டர்’ உணவாக மட்டும் அல்லாமல், ஒரு தனி சாப்பாடாகவே ரசிக்கத் தொடங்கினர். சென்னை வந்த ராணுவ வீரர்கள் மூலம், சிக்கன் 65 இந்தியா முழுவதும் பரவியது.

அந்த காலத்தில் ஜூக்பாக்ஸ் இசைப் பெட்டியையும் சென்னையில் பிரபலமானது. பாடல் கேட்டுக்கொண்டே சிக்கன் 65 சாப்பிடுவது அன்றைய இளைஞர்களின் பிடித்தமான அனுபவமாக இருந்ததாம். பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் போன்ற பல முக்கிய பிரபலங்களும் இந்த உணவை விரும்பி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

காலப்போக்கில் சிக்கன் 65-ன் மசாலா பல புதிய வடிவங்களாக மாறியது. கோபி 65, பன்னீர் 65, காளான் 65 போன்ற வகைகள் பின்னர் உருவாயின. ஆந்திராவில் அதிக காரத்துடனும், கர்நாடகாவில் வேறு பெயர்களிலும், உலக நாடுகளில் தனித்தனி ஸ்டைல்களிலும் இது பரவியது.

இன்று ‘சிக்கன் 65’ இந்திய உணவின் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ‘மாஸ்டர் செஃப்’ போன்ற சர்வதேச சமையல் நிகழ்ச்சிகளிலும் இது இடம்பெற்றுள்ளது.

100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த உணவு ரசிகர்களைப் பெற்றிருக்கிறது.
ஒரு சாதாரண புத்தாண்டு நாளில், “புதுசா ஏதாவது இருக்கா?” என்ற கேள்வியிலிருந்து பிறந்த இந்த உணவு, இன்று உலகையே கவர்ந்த சுவையாக மாறியுள்ளது என்பதே அதன் உண்மையான சிறப்பு.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK