சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!!
சிங்கப்பூரில் எட்டோமிடேட் என்ற மயக்கமருந்து கலந்த மின்-சிகரெட்டைப் பயன்படுத்திவிட்டு, 4 மாத காலத்திற்குள் 7 வாகன விபத்துக்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக 31 வயது நபர் ஒருவர் மீது மன்றத்தில் இன்று (ஜூலை 15) குற்றம் சாட்டப்பட உள்ளது.
சிங்கப்பூர் காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த தொடர் விபத்து சம்பவங்கள் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 21 முதல் 2025 பிப்ரவரி 6 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளன.
2025 பிப்ரவரி 6, அன்று காலை 8:00 மணி அளவில் புங்கோல் நார்த் அவென்யூவில் 3 வழிகளைக் கொண்ட சாலையில், அந்த நபர் போக்குவரத்துக்கு எதிர்திசையில் காரைச் செலுத்தி, எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் அவரிடம் இருந்து மின் சிகரெட் மற்றும் அதன் திரவபாட் (Pod) ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பிப்ரவரி 4 அன்று சிமெய் அவென்யூவில் மோட்டார் சைக்கிள் மீது மோதி, 27 வயது சவாரி செய்பவரின் மணிக்கட்டில் முறிவை ஏற்படுத்தினார்..
சிங்கப்பூர் நீதிமன்றத்தில் அந்த நபர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. எட்டோமிடேட் போதையின் தாக்கத்தில் வாகனம் ஓட்டியது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாக வாகனம் ஒட்டி காயத்தை ஏற்படுத்தியது, அரசு ஊழியரிடம் தவறான தகவல் அளித்தது(விபத்தின் போது வேப் பயன்படுத்தவில்லை என்று முதலில் பொய் கூறி உள்ளார்) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்படும்.
விபத்து நடந்த உடனே அவரது ஓட்டுநர் உரிமம் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டது. எட்டோமிடேட் போன்ற மருத்துவ மயக்க மருந்துகளை மின்-சிகரெட்டுகளில் கலந்து சட்டவிரோதமாகப் பயன்படுத்துவது சிங்கப்பூரில் கடுமையான பொதுப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து அச்சுறுத்தலாக மாறி வருகிறது.