ஆடம்பர வாழ்க்கைக்காக எல்லை மீறிய கடிகார விற்பனையாளர்..!!

ஆடம்பர வாழ்க்கைக்காக எல்லை மீறிய கடிகார விற்பனையாளர்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புகழ்பெற்ற கைக்கடிகார சில்லறை விற்பனையாளரான கோர்டினா வாட்ச்சின் முன்னாள் விற்பனையாளர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடனில் சிக்கினார். அவர் கிரெடிட் கார்டு கடனை அடைக்க ஆடம்பர கைக்கடிகாரங்களை வாங்குவதாக பொய்யாகக் கூறி, கிட்டத்தட்ட S$500,000 மோசடி செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றம் நேற்று(03.02.26) சிறைத்தண்டனை விதித்துள்ளது.

33 வயதுடைய சோ ஜியான் குன், நான்கு கூட்டு மோசடி குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் தொடர்புடைய 13 குற்றச்சாட்டுகள் நீதிபதியின் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு 50 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கு விவரங்களின்படி, சோ ஜியான் குன் 2015 ஆம் ஆண்டு கோர்டினா வாட்ச் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றத் தொடங்கினார். பின்னர் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கிடையில் மெரினா பே சாண்ட்ஸில் உள்ள கிளைக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டதுடன், பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைத்தது.

வருமானம் அதிகரித்ததன் பின்னர், அவர் ஆடம்பர பொருட்கள் வாங்குதல் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் அதிகமாக செலவழிக்கத் தொடங்கினார்.இதனால் பல கிரெடிட் கார்டுகளின் மூலம் பெரும் கடன் ஏற்பட்டதாகவும்,அந்தக் கடனைச் சமாளிக்க முடியாமல் தவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடனை அடைக்க முயன்ற நிலையில், நண்பர்கள் மற்றும் முன்னாள் வாடிக்கையாளர்களிடம் ஊழியர் கொள்முதல் திட்டத்தின் மூலம் ஆடம்பர கடிகாரங்களை வாங்கித் தர முடியும் என கூறி,“வைப்புத் தொகை” என்ற பெயரில் பணத்தை வசூலித்துள்ளார். இந்த முறையில்,14 பேரிடம் இருந்து மொத்தமாக S$494,583 பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்காக எந்தக் கடிகாரங்களும் ஆர்டர் செய்யப்படவில்லை என்றும், பெற்ற பணம் முழுவதும் கிரெடிட் கார்டு கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அரசு தரப்பு 58 முதல் 67 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கோரிய நிலையில், நீதிபதி 50 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK