சிங்கப்பூரின் உணவு திட்டத்தில் புதிய திருப்பம்..!!விஷன் 30·30க்கு விடை..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் தனது உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது. நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஃபூ ஹையான், “விஷன் 30·30”க்கு பதிலாக புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்படுவதாக தெரிவித்தார்.
முன்னதாக 2030க்குள் நாட்டின் ஊட்டச்சத்து தேவைகளில் 30% உணவை உள்ளூரில் உற்பத்தி செய்வது இலக்காக இருந்தது. ஆனால் நிலப்பரப்பு குறைவு,அதிக இயக்கச் செலவு போன்ற சவால்களை முன்னிட்டு அந்த திட்டம் மாற்றப்படுகிறது.
புதிய “Singapore Food Story 2” முயற்சியின் கீழ், சிங்கப்பூர் உணவு மீள்தன்மையை மேம்படுத்தி நெருக்கடி காலங்களிலும் போதுமான உணவு விநியோகத்தை உறுதி செய்ய உள்ளது. இதற்காக நான்கு முக்கிய தூண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவை உள்ளூர் உணவு உற்பத்தி, இறக்குமதி ஆதார பல்வகைப்படுத்தல், உணவு கையிருப்பு மற்றும் உலகளாவிய கூட்டாண்மை போன்றவை ஆகும்.
ஃபூ ஹையான் கூறுகையில், 2035க்குள் உள்ளூர் பண்ணைகள் மூலம் நார்ச்சத்து தேவைகளில் 20% (காய்கறிகள், மொச்சைகள், காளான்) மற்றும் புரத தேவைகளில் 30% (முட்டை, கடல் உணவு) உற்பத்தி செய்வதே இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் தற்போது பல குத்தகைதாரர்களுக்கான சோதனை வசதிகளை அமைக்க பரிசீலித்து வருகின்றனர். இந்த வசதிகள் பண்ணைகளுக்கு “பிளக் அண்ட் ப்ளே” வாடகை இடத்தை வழங்கி தொடக்கச் செலவையும் மூலதனத் தேவையையும் குறைக்கும்.
மேலும், அரசாங்கத்தின் Agri-Food Cluster Transformation Fund வாயிலாக, பண்ணைகள் விவசாய தொழில்நுட்பங்களைப் பின்பற்ற நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இதுவரை 135 திட்டங்களுக்கு S$40 மில்லியனுக்கு மேல் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.