வதந்தி குறித்து விளக்கமளித்த கேபிடாலேண்ட் நிறுவனம்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் இரண்டு முக்கியமான உள்ளூர் சொத்து மேலாண்மை நிறுவனங்களான கேபிடாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் (CapitaLand Investment Ltd) மற்றும் மேப்லெட்ரீ இன்வெஸ்ட்மென்ட்ஸ் (Mapletree Investments) ஆகியவை இணைப்பு குறித்து விவாதித்து வருவதாக வதந்திகள் பரவின.
ஆனால், கேபிடாலேண்ட் நிறுவனம் இதுகுறித்து ஒரு அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கை வெளியிட்டு நிலைமையை தெளிவுபடுத்தியுள்ளது.
அதில், நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பை வழங்க உறுதியாக இருப்பதோடு, தனது மூலோபாய இலக்குகளை அடைவதற்காக பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை மதிப்பீடு செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இணைப்பு தொடர்பான வதந்திகள் மற்றும் ஊகங்கள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கப் போவதில்லை என்றும், பகிரங்கப்படுத்த வேண்டிய விஷயங்கள் இருந்தால் சிங்கப்பூர் பங்குச் சந்தையின் விதிகளின்படி அவை அறிவிக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தெமாசெக் ஹோல்டிங்ஸ் ஆதரவு பெற்ற கேபிடாலேண்ட் மற்றும் தெமாசெக்கின் முழு உரிமையிலுள்ள மேப்லெட்ரீ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை வணிக இணைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.