சாலையில் செல்லும் வாகனங்களின் பின்புறம் CNG என எழுதி இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதேபோல நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் சிலிண்டரின் உள்ளே LPG இருப்பதை தெரிந்திருப்போம்.
இந்த இரண்டு வாயுவும் பார்ப்பதற்கு ஒன்று போல தெரிந்தாலும் இவற்றிற்கு இடையே பெரிய வேறுபாடு உள்ளது. அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பூமிக்கு அடியில் இயற்கையாகவே கிடைக்கும் இயற்கை வாயுவை எடுத்து அதிக அழுத்தத்திற்கு உட்படுத்துவதன் மூலம் சி.என்.ஜி நமக்கு கிடைக்கிறது. இதில் முதன்மையாக மீத்தேன் வாயு உள்ளது. இதன் வேதியியல் மூலக்கூறு வாய்ப்பாடு CH4.
இந்த வாயு சாதாரண காற்றை விட எடை குறைவானது என்பதால் வாயு கசிவு ஏற்பட்டாலும் அது தரைப்பகுதியில் தங்காமல் காற்றில் மிக வேகமாக மேல்நோக்கி பறந்து மறைந்துவிடும்.
இதனால் பெரிய தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு. இது பெட்ரோலை விட விலை மலிவானது மற்றும் புகையை குறைவாக வெளியிடுவதால் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதுகாப்பான எரிபொருளாக விளங்குகிறது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கும் போது அதன் கூடுதல் தயாரிப்பாக எல் பி ஜி வாயு நமக்கு கிடைக்கிறது. இந்த வாயுவின் உள்ளே புரோப்போன் (C3H8) மற்றும் பியூட்டேன் (C4H10) என்ற இரு வாயுக்கள் கலந்துள்ளன.
இந்த எல் பி ஜி வாயு சாதாரண காற்றை விட கனமானது என்பதால், வாயு கசிவு ஏற்பட்டால் அது காற்றில் பறந்து மறைந்து விடாமல் தரையோடு தங்கிவிடும். இதனால் தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் சற்று அதிகமாக உள்ளது.
இருப்பினும் இதனை சிறிய சிலிண்டர் களில் அடைத்து சமையலுக்கு மிக எளிதாக நாம் பயன்படுத்தலாம் மற்றும் இது அதிக வெப்பத்தை விரைவாக கொடுக்கும் ஆற்றலும் கொண்டது.
கூடுதலாக இதில் வாய் கசிவு ஏதேனும் ஏற்பட்டால் அந்த வாயுவை கண்டறிவதற்கு மெர்காப்டன் என்ற வாயு இதில் கலந்துள்ளது. ஆனால் சி.என்.ஜி உடன் ஒப்பிடும்போது இதன் விலை சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் வீட்டு சமையலை ருசியாக உதவுவது எல் பி ஜி. நமது ஊரின் காற்றை தூய்மையாக்கி வாகனங்களை புகையில்லாமல் இயக்க உதவுவது சி.என்.ஜி. எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் மாசை குறைக்க நாமும் சி.என்.ஜி வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.