முடி அதிகமா வளரணுமா..?? அப்ப இத Follow பண்ணுங்க..!!

முடி அதிகமா வளரணுமா..?? அப்ப இத Follow பண்ணுங்க..!!

முடி வளர்ச்சியை வேகப்படுத்தும் வைட்டமின்கள்:
அடர்த்தியான, பளபளப்பான, நீண்ட முடி கொண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் முடி உதிர்வு, முடி மெலிதல், முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சினைகள் முடி வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன.

ஒருசில வைட்டமின்கள் குறைபாடு அதற்கு காரணமாக அமைகின்றன. உண்ணும் உணவில் அவைகளை கூடுதலாக இடம் பெறச் செய்யும்பட்சத்தில் முடி வளர்ச்சியை வேகப்படுத்தலாம். அதற்கு உதவிடும் முக்கியமான 5 வைட்டமின்கள் பற்றி பார்ப்போம்.

பயோட்டின்


முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய வைட்டமினாக பயோட்டின் அமைந்திருக்கிறது. ஏனெனில் முடி, தோல் மற்றும் நகங்களை உருவாக்கும் முதன்மையான கெரட்டினை உற்பத்தி செய்வதற்கு பயோட்டின் உதவும்.
அதிலும் முடி உதிர்வு, முடி எளிதில் உடைவது, முடி வளர்ச்சி மெதுவாக நடப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் பயோட்டின் குறைபாடும் அதற்கு காரணமாகும்.

முட்டை, நட்ஸ், விதைகள், சால்மன் மீன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றில் பயோட்டின் இயற்கையாகவே காணப்படுகிறது.
உணவு மூலம் போதுமான அளவு பயோட்டின் கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று பயோட்டின் சப்ளிமெண்டுகள் சாப்பிடுவது நல்லது. அவை முடிக்கு தேவையான ஊக்கத்தை அளிக்கும். சில மாதங்களிலேயே முடி வலுவாகவும், பளபளப்பாகவும் மாறக்கூடும்.

வைட்டமின் டி


வைட்டமின் டி குறைபாடுக்கும், முடி மெலிதல் மற்றும் வழுக்கைக்கும் தொடர்பு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த வைட்டமின் புதிய மயிர்க்கால்களை உருவாக்க உதவும்.
அடர்த்தியான, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை விரும்பினால் வைட்டமின் டி அவசியமானது. நம்மில் பலர் போதுமான அளவு சூரிய ஒளியை பெறுவதில்லை என்பதால், வைட்டமின் டி குறைபாடு உண்டாகிறது.

வைட்டமின் டி அளவை அதிகரிப்பதற்கான எளிதான வழி, வாரத்தில் ஒருசில நாட்களாவது 15 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நேரம் செலவிடுவதாகும். மீன்கள், காளான்கள், செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள் மூலமாகவும் வைட்டமின் டி-யை பெறலாம்.
உங்கள் உடலில் வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தால் மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை உட்கொள்ளலாம். வைட்டமின் டி முடியின் மயிர்க்கால்களுக்கு சிறந்த நண்பனாக விளங்கும்.

வைட்டமின் சி


இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு முடி வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. கொலாஜனை உற்பத்தி செய்ய தூண்டும், முடியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் புரதமாகவும் விளங்கும். முடி உதிர்வதைத் தடுப்பதற்கும், இரும்பை உறிஞ்சுவதற்கும் உதவி செய்யும்.
சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, குடைமிளகாய் மற்றும் புரோக்கோலி ஆகியவற்றில் இருந்து வைட்டமின் சி பெறலாம்.

அடர்த்தியான, வலுவான கூந்தலைப் பெற விரும்பினால், வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுவது அவசியமானது.
முடி வளர்ச்சிக்கு உணவே சிறந்தது என்பதை மறந்துவிடாதீர்கள். மருத்துவர் பரிந்துரைக்காமல் வைட்டமின் மாத்திரைகளை பயன்படுத்தாதீர்கள்.

வைட்டமின் இ


உச்சந்தலைக்கு சிறந்த ஸ்பா சிகிச்சை போன்று வைட்டமின் இ-யின் செயல்பாடு அமைந்திருக்கும்.
சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட் கொண்ட இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மயிர்க்கால்களுக்கு ஊட்டம் அளித்து முடி வளர்ச்சியை வேகமாக ஊக்குவிக்கும். ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை சரிசெய்யும்.
பாதாம், சூரியகாந்தி விதைகள், கீரை, அவகேடோ பழங்கள் மூலம் வைட்டமின் இ அளவை அதிகரிக்க செய்யலாம்.

சிலர் வைட்டமின் இ எண்ணெய்யை நேரடியாக உச்சந்தலையில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் வைட்டமின் இ நிறைந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுவது கூட முடியை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

வைட்டமின் ஏ


முடியில் உள்ள செல்கள் உட்பட உடலிலுள்ள ஒவ்வொரு செல்களின் வளர்ச்சிக்கும் வைட்டமின் ஏ தேவைப்படும்.
உச்சந்தலையை ஈரப்பதமாகவும், முடியை பளபளப்பாகவும் வைத்திருக்கும் இயற்கை எண்ணெய் போன்ற சீபத்தை உற்பத்தி செய்யவும் வைட்டமின் ஏ உதவும். உடலில் போதுமான அளவு வைட்டமின் ஏ இல்லாவிட்டால் முடி வறண்டு, பலவீனமாகி, எளிதில் உடைந்துவிடும்.

கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பசலைக்கீரை உள்ளவற்றில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கும். அதேவேளையில் வைட்டமின் ஏ அளவு அதிகமாகிவிட்டால் முடி உதிர்வையும் ஏற்படுத்தக்கூடும். எனவே அளவோடு உட்கொள்வது முக்கியமானது.