மக்களே... அரிய வகை தாவரங்களை காணும் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவின் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்கு இதுவரை வெளிப்படுத்தப்படாத அரிய வகை தாவர பாரம்பரியங்களை அறிமுகப்படுத்தும் சிறப்பு கண்காட்சி தொடங்கியுள்ளது.
நேற்று(08.01.26) தொடங்கிய இந்தக் கண்காட்சி, இந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியில், கடந்த கால தாவரவியல் பூங்கா இயக்குநர்களின் தனிப்பட்ட சேகரிப்புகளில் இடம்பெற்ற கலைப்பொருட்கள், 1790களின் அரிய தாவர மாதிரிகள் மற்றும் 500 ஆண்டுகள் பழமையான மறுமலர்ச்சி கால தாவரவியல் நூல்கள் முதன்முறையாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தாவரவியலாளர்களின் பணிகளை நேரடியாக அனுபவிக்கும் வகையில், உண்மையான தாவர மாதிரிகளைத் தொடுவது, நுண்ணோக்கியில் அவற்றைக் கவனிப்பது, புதிய தாவர இனங்களை எவ்வாறு அடையாளம் காண்கிறார்கள் என்பதைக் கற்றுக்கொள்ளும் ஊடாடும் செயல்பாடுகளும் இடம்பெறுகின்றன.
15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த அரிய தாவர மாதிரிகள் தனியார் சேகரிப்பிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதால், இது மிகவும் அரிதான வாய்ப்பாக கருதப்படுகிறது.
இந்த அரிய வகை தாவர மாதிரிகளைப் பார்வையிட பொதுமக்கள் மே 31 ஆம் தேதிக்குள் வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவின் மூன்றாவது இயக்குநரான டாக்டர் ரிச்சர்ட் எரிக் ஹோல்ட்டமின் நுண்ணோக்கியும் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவர் சிங்கப்பூரின் உலகப்புகழ்பெற்ற ஆர்க்கிட் தொழிலுக்கான அடித்தளத்தை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.