இனிப்பான மாம்பழங்களை தேர்ந்தெடுப்பது எப்படி? இந்த பதிவை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!
கோடைக்கால பழங்களில் மாம்பழத்துக்கு முதன்மை இடம் உண்டு. சாறும், சுவையும் மிகுந்த பழுத்த மாம்பழங்களை ருசிப்பதே அலாதியானது. மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் இனிப்பான, சாறு மிகுந்த மாம்பழங்களை தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்ப்போம்.
காம்பு பகுதி: முதலில் மாம்பழத்தின் காம்பு பகுதியை முகர்ந்து பாருங்கள். அதில் இருந்து அன்னாசிப்பழம் அல்லது முலாம் பழம் போன்ற பழ வாசனை வெளிப்பட வேண்டும்.
வாசனையே இல்லை என்றால் அந்த பழம் முழுமையாக பழுக்கவில்லை என்று அர்த்தம். புளிப்பு அல்லது மது போன்ற வாசனை வந்தால் அந்த பழம் கெட்டுப்போய்விட்டது என்று அர்த்தம்.
அழுத்தி பார்த்தல்: கட்டை விரலால் மாம்பழத்தை மெதுவாக அழுத்தவும். அப்போது விரல் மென்மைத்தன்மையுடன் சிறிதளவு அழுத்தத்துக்கு உள்ளானால் அது இனிப்பு சாறு நிறைந்த பழமாக இருக்கும். மிகவும் கடினமாக இருந்தால் பழுக்காத, புளிப்புத் தன்மை கொண்ட பழமாகும். விரல் பட்டதும் உள்ளே குழைவாக இருந்தால் அதிகமாக பழுத்த பழமாக இருக்கும்.
எடை அறிதல்: மாம்பழத்தை கையில் எடுத்ததும் கனமாக இருந்தால் சாறு நிரம்பியிருக்கும். இனிப்பும், குறைவான நார்ச்சத்தும்கொண்டிருக்கும் என்று அறிந்துகொள்ளலாம். மாம்பழத்தின் எடை குறைவாக இருந்தால் உள் பகுதி உலர்ந்தாகவும், சுவை குறைவாகவும் இருக்கக்கூடும்.
வடிவம்: மாம்பழங்களைத் தேர்வு செய்யும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். உருண்டையான, தசைப்பற்றுள்ள, கால்பந்து வடிவம் கொண்ட மாம்பழங்களை தேர்ந்தெடுக்கலாம். இந்த வகை மாம்பழங்கள் அதிக சதைப்பற்றும், இனிப்பும் கொண்டிருக்கும். தட்டையான, மெலிந்த மாம்பழங்களில் நார்ச்சத்தும, சுவையும் குறைவாக இருக்கக்கூடும்.
மாம்பழ தேர்வு முறை: >>அல்போன்சா: அல்போன்சா மாம்பழம் என்றால் அதன் தோல் பகுதியை லேசாக தட்டிப்பார்க்கவும். பழுத்த பப்பாளி பழத்தை போல சத்தம் கேட்டால் அதில் இனிப்பான சதைப்பகுதி நிறைந்துள்ளது என்று அர்த்தம். சத்தம் மந்தமாக கேட்டால் நார்ச்சத்து அதிகமாக உள்ளது என்று பொருள். பழத்தை சுற்றி கருப்பு புள்ளிகள் இருப்பது சுவையை சற்று குறைக்கக்கூடும். அல்போன்சா மாம்பழத்தின் காம்பு பகுதி மலர் மணம் கொண்டதாக இருந்தால் சுவை கூடுதலாக இருக்கும்.:
>>தாசேரி: லேசான சிவந்த நிறமும், சீரான மஞ்சள்-ஆரஞ்சு நிறத்தோலும் கொண்ட மாம்பழங்களை தேர்வு செய்யலாம். இதன் தோல் பகுதியை அழுத்தும்போது லேசாக சுருங்க வேண்டும். பழத்தை மெதுவாக உலுக்கும்போது சலசலக்கும் சத்தம் கேட்டால் சதைப்பற்றுடன் சாறு கொண்டிருப்பதாக அர்த்தம். சத்தம் கேட்கவில்லை என்றால் உலர்ந்துவிட்டதாக அர்த்தம்.
>>கேசர்: அடிப்பகுதியில் கனமாகவும், செந்நிற, பொன்னிறக் கோடுகளையும் கொண்டிருக்கும் மாம்பழங்களை தேர்ந்தெடுக்கலாம். குஜராத்தின் ‘மாம்பழங்களின் ராணி’ என்று அழைக்கப்படும் கேசர் மாம்பழம், குங்குமப்பூ போன்ற நறுமணத்தைக் கொண்டது. காம்பில் இருந்து வாசனை வெளிப்படுகிறதா என்பதை அறிய நுகர்ந்து பார்க்கவும். சாறு கசியும் மாம்பழங்களைத் தவிர்க்கவும்.