மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!! தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு..!

மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!! தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு..!

கோலாலம்பூர்: 30 நாட்கள் விசா இல்லாமல் மலேசியாவிற்கு செல்லும் வசதியைப் பயன்படுத்தி வேலை தேடி வரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

மலேசியாவிற்கு சுற்றுலா விசா அல்லது விசா இல்லா பயண வசதியின் மூலம் சென்று அங்கு வேலை செய்வதைத் தவிர்க்குமாறு கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களை எச்சரித்துள்ளது.

பல இந்தியர்கள் நேர்மையற்ற முகவர்களின் தவறான வேலைவாய்ப்பு வாக்குறுதிகளால் ஏமாற்றப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் விசா காலத்தை மீறுதல், சட்டவிரோத குடியேற்ற நிலை, சுரண்டல், தடுப்பு காவல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

இது மலேசியாவின் குடியேற்ற விதிமுறைகளை தெளிவாக மீறும் செயலாகும். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்குவதற்கான விசா இல்லா நுழைவு வசதி, சுற்றுலா மற்றும் சமூகப் பயணங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


உண்மையான சுற்றுலாப் பயணிகள் பின்வரும் செல்லுபடியாகும் மற்றும் சரிபார்க்கக்கூடிய ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்:

👉 உறுதி செய்யப்பட்ட திரும்பும் விமானப் பயணச்சீட்டு
👉 ஹோட்டல் முன்பதிவு
👉 Malaysia Digital Arrival Card (MDAC) – வருகை தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் சமர்ப்பித்திருக்க வேண்டும்
👉 குறைந்தபட்சம் 6 மாத கால செல்லுபடியாகும் பாஸ்போர்ட்

இவ்வாவணங்கள் மலேசியா சென்றடையும் போது குடியேற்றம் தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

மீண்டும் ஒருமுறை, இந்தியர்கள் வேலை / வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக உரிய வேலை அனுமதி (Work Permit) அல்லது VDR (Visa with Reference) விசா இல்லாமல் மலேசியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் எனக் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.