ஆஸ்திரேலியாவில் உணவு விநியோகம் செய்த சீனர் கத்தியால் குத்திக் கொலை..!! குடும்பத்துடன் இணைய நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்..!!

ஆஸ்திரேலியாவில் உணவு விநியோகம் செய்த சீனர் கத்தியால் குத்திக் கொலை..!! குடும்பத்துடன் இணைய நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்..!!

ஆஸ்திரேலியாவில் சுமார் 9 ஆண்டுகளாக உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டு வந்த சீனாவைச் சேர்ந்த நபர், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 6ஆம் தேதி உணவு விநியோகம் செய்துகொண்டிருந்தபோது அவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் 30 வயதுடைய மற்றொரு நபரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சந்தேக நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இறந்தவர் தினமும் உணவு வாங்கிச் செல்லும் வாடிக்கையாளராக அல்லாமல், அந்த உணவகத்தின் ஊழியர்களுக்கு நன்கு அறிமுகமானவராகவும் இருந்துள்ளார். அவர் எப்போதும் புன்னகையுடன் பழகுவார் என்றும், உணவு தயாராவதற்குத் தாமதமானாலும் அமைதியாகக் காத்திருப்பார் என்றும் ஊழியர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

மேலும், ஊழியர்களிடம் அக்கறையுடன் பேசி, அதிகமாக வேலை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்துவாராம்.
அந்த உணவகத்தில் பணிபுரியும் சீனப் பெண் ஒருவர், சம்பவத்தின் காணொளியைப் பார்த்தபோது உயிரிழந்தவர் தனக்குத் தெரிந்த ‘மாமா’ என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ளார்.

தனது மகனின் கல்விச் செலவுக்காகக் கடினமாக உழைப்பதாக அவர் ஒருமுறை தன்னிடம் கூறியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
இறந்தவரின் குடும்பத்தினர் கூறுகையில், அவர் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார்.

அங்கு கிடைக்கும் வருமானத்தை மனைவி, குழந்தைகள் மற்றும் வயதான தந்தையின் தேவைகளுக்காக அனுப்பி வந்துள்ளார்.
அவர் மிகவும் சிக்கனமாக வாழ்ந்து, குடும்பத்திற்காகவே தனது வருமானத்தைச் சேமித்து வந்துள்ளார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை தற்போது முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். அவருக்கான மாதச் செலவு சுமார் 4,000 முதல் 5,000 யுவான் வரை இருந்துள்ளது.

மேலும், தனது மகனுக்குத் திருமணம் நடைபெற்ற பிறகு ஓரிரு ஆண்டுகளில் சீனாவுக்குத் திரும்பி குடும்பத்துடன் வாழ வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்துள்ளது. அதற்காக இன்னும் சில ஆண்டுகள் உழைக்கத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், குடும்பத்துடன் மீண்டும் இணையும் அவரது கனவு நிறைவேறுவதற்கு முன்பே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தால் குடும்பத்தின் முக்கிய வருமான ஆதாரத்தை இழந்துவிட்டதாக அவரது மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.
இனி குழந்தைகளையும் வயதான தந்தையையும் எப்படிப் பராமரிப்பது, எதிர்காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியாமல் தவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆதரவாக அந்த உணவகம் தனது ஊழியர்கள் சார்பில் AU$500 (சுமார் S$440) நன்கொடையாக வழங்கியுள்ளது. குடும்பத்தினரின் ஒப்புதலுடன் முறையான நிதி திரட்டும் ஏற்பாடு செய்யப்பட்டால் தொடர்ந்து உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.