சாலையில் விழுந்து கிடந்த 56 வயது ஆடவர்..!! சிங்கப்பூர் கேலாங் சாலையில் நடந்த விபத்தின் பின்னணி!
சிங்கப்பூரின் கேலாங் (Geylang) சாலையில் கார் மற்றும் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில், 56 வயது சைக்கிள் ஓட்டுநர் லேசான காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து நவம்பர் 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுமார் 10:20 மணியளவில் நிகழ்ந்துள்ளது. கேலாங் சாலையில் இருந்து கல்லாங் சாலை (Kallang Road) நோக்கிச் செல்லும் வழியில் கார் ஒன்றும் சைக்கிளும் மோதிக்கொண்டதாகச் சிங்கப்பூர் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
விபத்து நடந்த இடத்தில் சைக்கிள் ஓட்டுநர் சாலையில் விழுந்து கிடந்ததைப் பார்த்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், SG Road Vigilante என்ற Facebook பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களிலும், ஒருவர் சாலையில் முகம் குப்புறப் படுத்திருப்பதும், மற்றொருவர் அருகில் நின்றுகொண்டு தொலைபேசி மூலம் உதவி கோருவதும் காணப்பட்டது.
இதையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், விபத்தில் 56 வயது ஆண் சைக்கிள் ஓட்டுநர் லேசான காயமடைந்ததாகத் தெரிவித்தனர். இருப்பினும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் தொடர்புடைய 33 வயது ஆண் கார் ஓட்டுநரும், 56 வயது சைக்கிள் ஓட்டுநரும் தற்போது காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகின்றனர்.
விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.