22 ஆண்டுகால நல்லவர் வேடம் கலைந்தது..!! கின்னஸ் ICON ஆன ஜான் சீனா..!!
மல்யுத்த உலகில் மட்டுமின்றி உலகப் பாப் கலாசாரத்திலும் தனது பெயரைப் பதித்துள்ள உலக மல்யுத்த பொழுதுபோக்கு அமைப்பின் (WWE) தூதரான ஜான் சீனா (John Cena)கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ “ICON” ஆக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இந்த செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள ‘கின்னஸ் உலக சாதனைகள் 2027’ புத்தகத்தில் இவரது இந்த மைல்கல் சாதனை கொண்டாடப்படவுள்ளதுடன், அவர் படைத்துள்ள அசாத்தியமான கின்னஸ் சாதனைகளும் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
2002 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், அதிகப்படியான WWE சாம்பியன்ஷிப் பட்டங்களை (ஆண்கள் பிரிவு) வென்ற வீரராக ஜான் சீனா சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் லோஸ் வேகாஸில் நடைபெற்ற ரெஸில்மேனியா 41 (WrestleMania 41) தொடரில், கோடி ரோட்ஸை (Cody Rhodes) தோற்கடித்து தனது வரலாற்றுச் சிறப்புமிக்க 17ஆவது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றி இச்சாதனையை அவர் நிலைநாட்டினார்.
இதற்கு முன்னர் 16 பட்டங்களுடன் ரிக் பிளேயர் (Ric Flair) வசம் இருந்த சாதனையையே 49 வயதான ஜான் செனா முறியடித்துள்ளார்.
இது தவிர, WWE வரலாற்றில் மிக நீண்ட காலம் (22 ஆண்டுகள் 247 நாட்கள்) “நல்லவர்” (Face Run) கதாபாத்திரத்தில் நடித்து, பின்னர் வில்லனாக (Heel) மாறியதற்கான கின்னஸ் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
தி ரொக் (The Rock) என அழைக்கப்படும் டுவைன் ஜான்சனின் உத்தரவின் பேரில் கோடி ரோட்ஸைத் தாக்கி அவர் வில்லனாக மாறியது இரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், மல்யுத்த களத்திற்கு வெளியேயும் ‘மேக்-ஏ-விஷ்’ (Make-A-Wish) அறக்கட்டளை மூலம் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள 650 க்கும் மேற்பட்ட சிறுவர்களின் ஆசைகளை நிறைவேற்றி, உலகிலேயே அதிக ஆசைகளை நிறைவேற்றிய மனிதர் என்ற வரலாற்றுச் சாதனையையும் ஜான் சீனா தன்வசப்படுத்தியுள்ளார்.