24 மணி நேரத்தில் 2 உயிரிழப்புகள்..!! சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிகழ்ந்த சைக்கிள் விபத்துகள்..அதிர்ச்சி பின்னணி!

சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டிச் சென்ற 24 வயது இளைஞர், டிப்பர் லாரியுடன் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடந்த 24 மணி நேரத்திற்குள் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 12ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை சுமார் 8 மணியளவில், சிங்கப்பூரின் தனா மேரா கோஸ்ட் ரோட்டில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஏவியேஷன் பார்க் ரோடு (Aviation Park Road) நோக்கிச் செல்லும் சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 24 வயது ஆண் இளைஞர், டிப்பர் லாரியுடன் விபத்தில் சிக்கினார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் காவல்துறையினரும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ உதவியாளர்கள், சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த விபத்தில் தொடர்புடைய 38 வயது ஆண் டிப்பர் லாரி ஓட்டுநர், காவல்துறையின் விசாரணைக்கு உதவி செய்து வருகிறார்.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படங்களில், சாலையோரத்தில் டிப்பர் லாரி நிறுத்தப்பட்டிருப்பதும், அதன் பின்புறத்தில் கருப்பு நிற சைக்கிள் கீழே விழுந்து கிடப்பதும் காணப்பட்டன.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கு முந்தைய நாளான நவம்பர் 11ஆம் தேதி, சிங்கப்பூரின் காத்தோங் (Katong) பகுதியில் மற்றொரு சைக்கிள் விபத்து நிகழ்ந்தது.
அம்பார் ரோடு (Amber Road) மற்றும் அம்பார் கார்டன்ஸ் (Amber Gardens) சந்திப்பில் பிற்பகல் சுமார் 3.15 மணியளவில் சைக்கிள் மற்றும் டிப்பர் லாரி மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் 37 வயது பெண் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, 47 வயது லாரி ஓட்டுநர் மரணம் ஏற்படுத்தும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்த இரண்டு உயிரிழப்புச் சம்பவங்களும் சிங்கப்பூரில் சாலைப் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளன.
சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் சாலையில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவங்கள் மீண்டும் உணர்த்தியுள்ளன.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
