4 வயது சிறுமி மேகன் குங் மரண வழக்கு: துன்புறுத்தலை வீடியோ எடுத்த மூன்றாவது குற்றவாளிக்கு 13 ஆண்டுகள் சிறை!

சிங்கப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 4 வயது சிறுமி மேகன் குங் (Megan Khung) துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த வழக்கில், மூன்றாவது குற்றவாளியான 36 வயது Nouvelle Chua Ruoshi-க்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தாயார் மற்றும் அவரது காதலருடன் இணைந்து சிறுமியைத் துன்புறுத்தியதுடன், சம்பவங்களைத் தனது கைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்ததும், சிறுமியின் உடலை அகற்ற உதவியதும் விசாரணையில் தெரியவந்தது.
நவம்பர் 13ஆம் தேதி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதி S. Mohan, Nouvelle Chua Ruoshi-க்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
குற்றவாளி தனது நண்பர்களான சிறுமியின் தாயார் Foo Li Ping மற்றும் அவரது காதலர் Wong Shi Xiang ஆகியோருடன் இணைந்து சிறுமியைத் துன்புறுத்துவதற்குச் சதி செய்தது, சிறுமியின் உடலை அகற்ற உதவியது உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டிருந்தார்.
அவர் மீது போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டும் இருந்தது. சிறுமியை நேரடியாகத் தாக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி, தனது குற்றப்பங்கை குறைத்துக் காட்ட முயன்ற Nouvelle Chua-வின் வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை.
சிறுமி துன்புறுத்தப்பட்ட சம்பவங்களை குறைந்தது ஆறு முறை காணொளியாகப் பதிவு செய்துள்ளார். மேலும், சிறுமி காயமடைந்திருந்ததையும் அறிந்திருந்தும் அதிகாரிகளிடம் புகார் அளிக்கவோ, மருத்துவ உதவி பெற ஏற்பாடு செய்யவோ அவர் முன்வரவில்லை. சில சம்பவங்களில் சிறுமியை அவமானப்படுத்தும் செயல்களிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
இதனால் அவரை வெறும் பார்வையாளராகக் கருத முடியாது என்றும், சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் அவருக்கும் முக்கியப் பங்கு இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை மறைப்பதற்கான நடவடிக்கைகளில் தாயாருக்கும் காதலருக்கும் Nouvelle Chua உதவியுள்ளார். மேலும், உடலில் இருந்து துர்நாற்றம் வெளிவருவதை மறைப்பதற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2020 மே 8ஆம் தேதி, சிறுமியின் உடல் ஒரு வாகனப் பட்டறையில் உலோகப் பீப்பாயில் எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திலும் Nouvelle Chua பங்கேற்றுள்ளார். சிறுமியின் எஞ்சிய சாம்பல் இதுவரை மீட்கப்படவில்லை.
இந்த வழக்கில் சிறுமியின் தாயார் Foo Li Ping-க்கு 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறுமியைத் தாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த அவரது காதலர் Wong Shi Xiang-க்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 17 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. தற்போது மூன்றாவது குற்றவாளிக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் தொடர்புடைய மூவருக்கும் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
இந்தச் சம்பவம் சிங்கப்பூரில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பல கேள்விகளை எழுப்பியது. இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பாதுகாப்பைக் கண்காணிக்க வேண்டிய பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2025ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில், சிறுமியின் பள்ளியிலிருந்து வந்த எச்சரிக்கைகள் முறையாகப் பதிவு செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.
இதையடுத்து, குழந்தைகள் மீதான துன்புறுத்தல் தொடர்பான புகார்களை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான புதிய பிரிவைச் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் (MSF) அமைத்துள்ளது.
நான்கு வயது சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து நீண்டகாலமாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், மூன்றாவது குற்றவாளிக்கும் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
