80 ஆண்டு பழமையான கடையில் திடீர் தீ..! 40 பேர் வெளியேற்றம்..இருவர் மருத்துவமனையில்!
சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் 80 ஆண்டுகள் பழமையான கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருவர் புகையைச் சுவாசித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 40 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நவம்பர் 11ஆம் தேதி புதன்கிழமை நண்பகல் சுமார் 12:50 மணியளவில், Upper Cross Street பகுதியில் உள்ள 34ஆம் எண் கட்டடத்தில் அமைந்துள்ள Ming Da Pte Ltd கடையில் நிகழ்ந்தது.
கடையில் திடீரென அதிக அளவில் கரும்புகை வெளியேறியதால் அருகிலுள்ள கடைகளிலும் புகை பரவியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்குள்ளான கடையும் அருகிலுள்ள Ming Da கடல் உணவுப் பொருட்கள் மற்றும் சீன மூலிகை மருந்துகள் விற்பனைக் கடையும் ஒரே உரிமையாளருக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடை சுமார் 80 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், முதல் தளத்தில் உள்ள கடையின் சேமிப்பு அறையில் இருந்த பொருட்களில் தீப்பற்றியிருப்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து, கதவை உடைத்து உள்ளே நுழைந்த வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்தில் புகையைச் சுவாசித்த இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதே நேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் சுமார் 40 பேரை அங்கிருந்து வெளியேற்றினர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.