கார்களை நிறுத்தச் சொல்லி சாலையைக் கடந்த ஆடவர்..!! சிங்கப்பூரில் வைரலாகும் வீடியோ!

கார்களை நிறுத்தச் சொல்லி சாலையைக் கடந்த ஆடவர்..!! சிங்கப்பூரில் வைரலாகும் வீடியோ!

சிங்கப்பூரின் பொங்கோல் (Punggol) பகுதியில், ஆடவர் ஒருவர் ஒற்றைச் சக்கர வாகனத்தில் (Unicycle) சாலையைக் கடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

எட்ஜ்டேல் பிளெயின்ஸ் (Edgedale Plains) பகுதியில் உள்ள சாலைச் சந்திப்பில் இரவு நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கருப்பு நிற உடை அணிந்திருந்த அந்த ஆடவர், ஒற்றைச் சக்கர வாகனத்தில் ஏறிப் பயணிக்க இரண்டு முறை முயற்சி செய்தும் தோல்வியடைந்துள்ளார். மூன்றாவது முயற்சியில்தான் அவரால் வாகனத்தில் ஏற முடிந்துள்ளது.

இதையடுத்து, பாதசாரிகளுக்கான போக்குவரத்து விளக்கு பச்சை நிறமாக மாறியதும், அவர் அந்த வாகனத்தில் சாலையைக் கடக்கத் தொடங்கினார். சாலையின் நடுப்பகுதியில் உள்ள பாதுகாப்புத் தீவை அடைந்தபோது, பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு முடிவடைய இன்னும் சுமார் 4 முதல் 5 விநாடிகளே இருந்தன.


தொடர்ந்து, வாகனங்கள் வரும் பாதையைக் கடக்கும்போது எதிரே வந்த கார்களின் ஓட்டுநர்களிடம் கையசைத்து வாகனங்களை நிறுத்துமாறு சைகை செய்துள்ளார். பின்னர் சாலையைக் கடந்து, நடைபாதை வழியாகத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் அந்த ஆடவரின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஒற்றைச் சக்கர வாகனத்தைச் சரியாக ஓட்டக்கூட இன்னும் பழகவில்லை என்பது வீடியோவில் தெரிவதாகவும், இத்தகைய சூழலில் சாலையைக் கடப்பது ஆபத்தானது என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும், சாலையைக் கடக்கும்போது வாகனத்தை ஓட்டிச் செல்வதற்குப் பதிலாக, அதைத் தள்ளிக்கொண்டு நடந்து செல்ல வேண்டும் என்றும் இணையவாசிகள் கூறியுள்ளனர்.

சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) இணையத்தளத்தின்படி, ஒற்றைச் சக்கர வாகனம் மிதிவண்டி வகையைச் சேர்ந்தது அல்ல. அது தனிநபர் நடமாட்டச் சாதனமாக (Personal Mobility Device – PMD) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் Active Mobility Act சட்டத்தின்படி, மின்சாரத்தில் இயங்கும் மற்றும் மின்சாரம் இல்லாத தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் என இரு வகைச் சாதனங்களையும் பொதுச் சாலைகளில் பயன்படுத்த அனுமதி இல்லை.

இதனால், பொங்கோலில் ஒற்றைச் சக்கர வாகனத்தில் சாலையைக் கடந்த ஆடவரின் செயல் போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருக்கக்கூடும் என்ற விவாதம் எழுந்துள்ளது.