சிங்கப்பூரில் தேவாலயங்களுக்கு வரும் பக்தர்களிடம் 2 ஆண்டுகளாகப் பணம் கேட்டு தொல்லை..!! 40 வயது நபருக்கு 35 நாட்கள் சிறை!!

சிங்கப்பூரில் தேவாலயங்களுக்கு வரும் பக்தர்களிடம் 2 ஆண்டுகளாகப் பணம் கேட்டு தொல்லை..!! 40 வயது நபருக்கு 35 நாட்கள் சிறை!!

சிங்கப்பூரில், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேவாலயங்களுக்கு வரும் வழிபாட்டாளர்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த 40 வயது வேலையில்லாத நபருக்கு 35 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றத்திற்காக கடந்த 10ஆம் தேதி நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியது.

குற்றம் சாட்டப்பட்ட லின் ஜியான்லாங் (Lin Jianlong), தேவாலயங்களுக்கு வரும் பக்தர்களிடம் பணம் கேட்டு வந்ததுடன், அவர்களிடம் பணம் இல்லை என்று கூறியபோதும், பேநவ் (PayNow) மூலம் பணம் அனுப்புமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இவரது தொடர் தொல்லையால் அதிருப்தியடைந்த சில வழிபாட்டாளர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது ஐந்து பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் இரண்டு குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு விசாரித்தது. மீதமுள்ள மூன்று குற்றச்சாட்டுகளும் தண்டனை வழங்கும்போது நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

கடந்த 2025ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி காலை சுமார் 7 மணியளவில், தாம்சன் சாலையில் அமைந்துள்ள நோவினா தேவாலயத்திற்கு வழிபாட்டாளர்களிடம் பணம் கேட்கும் நோக்கத்தில் லின் சென்றுள்ளார். அப்போது காலை 7.54 மணியளவில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வந்த 32 வயது பெண்ணிடம் பணம் கேட்டுள்ளார்.

அந்தப் பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி மறுத்துள்ளார். இருப்பினும், லின் தொடர்ந்து வற்புறுத்தியதுடன், பேநவ் (PayNow) மூலம் பணம் அனுப்புமாறும் கேட்டுள்ளார். இதனால் எரிச்சலடைந்த அந்தப் பெண், பிச்சை கேட்பதை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பணம் கேட்டு தேவாலயத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் பொறுமையிழந்த அந்தப் பெண் காவல்துறையை அழைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடம், தான் வேலையை இழந்துவிட்டதாகவும், நிதி நெருக்கடியில் இருப்பதால் தேவாலயத்திற்கு வந்து பணம் கேட்பதாகவும் லின் தெரிவித்துள்ளார். அப்போது காவல்துறையினர் அவருக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

ஆனால், காவல்துறையினரின் எச்சரிக்கையையும் அவர் பொருட்படுத்தவில்லை. மே 22ஆம் தேதி நண்பகல் நேரத்தில் மீண்டும் நோவினா தேவாலயத்திற்குச் சென்ற அவர், அங்கு வழிபாட்டாளர்களிடம் பணம் கேட்டுள்ளார். இதைக் கவனித்த 68 வயதான தேவாலயப் பராமரிப்புப் பணியாளர், அவரை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு லின் இணங்கிச் சென்றார்.

இருப்பினும், அதே நாளில் மாலை சுமார் 5.35 மணியளவில் மீண்டும் தேவாலயத்திற்குத் திரும்பிய அவர், அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பலரிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் தேவாலயத்தில் குழப்பம் ஏற்பட்டதுடன், மற்றவர்களின் வழிபாட்டிற்கும் இடையூறு ஏற்பட்டது.

இதையடுத்து, மாலை 5.39 மணியளவில் தேவாலயப் பராமரிப்புப் பணியாளர் காவல்துறையினரை அழைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் லினைக் கைது செய்தனர்.

மேலும், 2024ஆம் ஆண்டிலேயே அப்பகுதியில் உள்ள பல தேவாலயங்களில் இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக, 2024 ஜனவரி 5ஆம் தேதி இரவு 9.25 மணியளவில் நோவினா தேவாலய உறுப்பினர்களிடம் மீண்டும் மீண்டும் பணம் கேட்டுள்ளார்.

அதேபோல், பிப்ரவரி 18ஆம் தேதி மதியம் 12.39 மணியளவில் கெய்லாங்கில் உள்ள லோரோங் 27A பகுதியில் அமைந்துள்ள பிரஸ்பைடேரியன் சர்ச் ஆஃப் கிறிஸ்ட் தேவாலயத்தில் சுற்றித் திரிந்துள்ளார். மார்ச் 9ஆம் தேதி மாலை 5.58 மணியளவில் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் திருச்சபை உறுப்பினர்களிடமும் பணம் கேட்டுத் தொந்தரவு செய்ததாகக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.

தேவாலயங்களுக்கு வரும் வழிபாட்டாளர்களிடம் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பணம் கேட்டு இடையூறு ஏற்படுத்திய சம்பவத்தில், 40 வயது நபருக்கு 35 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.