அண்ணனால் தாக்கப்பட்டதாகப் புகார்... நீதி கேட்டு போராடிய பெண்ணுக்கு அதிர்ச்சித் தீர்ப்பு! S$15,000 செலுத்த உத்தரவு!

சிங்கப்பூரில், தனது சொந்த அண்ணனால் தாக்கப்பட்டதாகக் கூறி அவருக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் குற்றவியல் வழக்குத் தொடர்ந்த 58 வயது பெண்ணின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், வழக்குச் செலவாக S$15,000 செலுத்தவும் அந்தப் பெண்ணுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் சீனப் புத்தாண்டு குடும்ப விருந்தில் கலந்துகொள்வதற்காகக் குடும்பத்தினர் தயாராகிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பெண்ணின் மூத்த சகோதரர், அவர் தந்தையிடம் சத்தமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டுள்ளார். தனது தந்தையை அவர் துன்புறுத்துவதாகத் தவறாகப் புரிந்துகொண்ட சகோதரர், அந்தப் பெண்ணைத் தள்ளியதாகக் கூறப்படுகிறது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்ணின் முதுகு படிக்கட்டில் மோதியுள்ளது. தொடர்ந்து அவரது முகத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தால் அவருக்குத் தலைச்சுற்றல், உடல் வலி, காதில் ரத்தக்கசிவு மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் இரண்டு இரவுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். சம்பவம் நடந்த அதே நாளில் சகோதரர் அவரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காவல்துறையில் புகார் அளித்தார். இருப்பினும், காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு அவரது சகோதரர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.
இதனால், நீதிமன்றத்தில் புகார் அளித்த அவர், தனது சகோதரருக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் குற்றவியல் வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, அவரது சகோதரர் தரப்பில் சமூகச் சேவை உத்தரவைப் பெற விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இது குடும்பப் பிரச்சினை தொடர்பான வழக்கு என்பதால், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் நிலைப்பாட்டை அறியுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, சிங்கப்பூர் தலைமைச் சட்டத்தரணி அலுவலகம் (Attorney-General’s Chambers – AGC) இந்த வழக்கில் தலையிட்டு, தனிப்பட்ட முறையில் தொடரப்பட்ட வழக்கை நிறுத்த முடிவு செய்தது.
2024ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி வழக்கு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரது சகோதரர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.
தனது சகோதரர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் வழக்கு நிறுத்தப்பட்டதை அந்தப் பெண் ஏற்கவில்லை. இதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர், சட்ட அமைச்சகம், பிரதமர் அலுவலகம் மற்றும் தலைமைச் சட்டத்தரணி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்குக் கடிதம் அனுப்பினார்.
பின்னர், தலைமைச் சட்டத்தரணி அலுவலகத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நீதித்துறை மறுஆய்வு கோரியும் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.
இதையடுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடினார். நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பெண்ணின் வழக்கறிஞர் Hassan Esa Almenoar, பாதிக்கப்பட்ட பெண்ணான தனது தரப்புக்கு வழக்கை நிறுத்தியதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று வாதிட்டார்.
மேலும், தலைமைச் சட்டத்தரணி அலுவலகம் தலையிடுவதற்கு முன்பு அவரது சகோதரர் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருந்ததாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
ஆனால், அரசுத் தரப்பு வழக்கறிஞர் Kenneth Chua, ஒரு வழக்கைத் தொடர வேண்டாம் என முடிவு செய்யும்போது அதற்கான காரணங்களைப் பொதுவழக்கறிஞர் தரப்பு கட்டாயமாக வெளியிட வேண்டும் என்ற சட்டப்பூர்வக் கடமை இல்லை என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு அமர்வு, நீதித்துறை மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான மூன்று மாத காலக்கெடுவை அந்தப் பெண் தவறவிட்டதாகக் குறிப்பிட்டது.
மேலும், தாமதத்திற்குப் போதுமான காரணங்களையும் அவர் நிரூபிக்கவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
தலைமைச் சட்டத்தரணி அலுவலகம் வழக்கை நிறுத்தியதில் தன்னிச்சையாகச் செயல்பட்டது அல்லது அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள சமத்துவ உரிமையை மீறியது என்பதை நிரூபிக்கத் தேவையான ஆரம்பகட்ட ஆதாரங்களையும் பெண் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனால் அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசுத் தரப்பு முதலில் S$25,000 வழக்குச் செலவைக் கோரியிருந்த நிலையில், பெண்ணின் தரப்பு வழக்கறிஞர் செலவுத் தொகையை விதிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தார்.
இறுதியில், அந்தப் பெண் S$15,000 வழக்குச் செலவைச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்புக்கான விரிவான காரணங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
