15ஆவது மாடி வீட்டில் திடீர் தீ விபத்து! பொங்கோலில் 70 பேர் வெளியேற்றம்..என்ன நடந்தது?

15ஆவது மாடி வீட்டில் திடீர் தீ விபத்து! பொங்கோலில் 70 பேர் வெளியேற்றம்..என்ன நடந்தது?

சிங்கப்பூரின் பொங்கோல் (Punggol) பகுதியில் உள்ள HDB குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, சுமார் 70 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நவம்பர் 10ஆம் தேதி இரவு சுமார் 10.10 மணியளவில் Edgefield Plains பகுதியில் உள்ள Block 105A குடியிருப்புக் கட்டடத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்தக் கட்டடத்தின் 15ஆவது மாடியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பற்றியுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு சமையலறையில் இருந்த பொருட்களில் தீப்பற்றியிருந்ததாகவும், தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்த மூவர் தாங்களாகவே வெளியேறியுள்ளனர். இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினரும் SCDF அதிகாரிகளும் இணைந்து அந்தக் கட்டடத்தில் வசித்த சுமார் 70 பேரை வெளியேற்றினர்.

இந்தச் சம்பவத்தில் புகையைச் சுவாசித்ததால் இருவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இருப்பினும், அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட வீட்டின் சமையலறையில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மின்சாரப் பாதுகாப்பு தொடர்பாக SCDF பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மின்சாரச் சாக்கெட்டுகளில் அதிகப்படியான மின்சாதனங்களை இணைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பயன்படுத்தாத மின்சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மின்சார வயர்களின் நிலையை அவ்வப்போது பரிசோதிப்பதுடன், மின்னணு சாதனங்கள் மற்றும் மின்கலன்களை நீண்ட நேரம் கண்காணிப்பின்றி சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் தீ விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் மின்சாரப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என SCDF வலியுறுத்தியுள்ளது.