சிங்கப்பூரில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!! மாற்றாந்தந்தைக்கு 19 ஆண்டுகள் சிறை, 16 பிரம்படிகள்

சிங்கப்பூரில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!! மாற்றாந்தந்தைக்கு 19 ஆண்டுகள் சிறை, 16 பிரம்படிகள்

சிங்கப்பூரில் அறிவுசார் குறைபாடுடைய தனது 14 வயது மாற்றாந்த மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 48 வயது ஆடவருக்கு 19 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனையும், 16 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் 2024ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இரவு நேரப் பணியை முடித்துவிட்டு மதுபோதையில் அதிகாலை வீடு திரும்பிய அந்த ஆடவர், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியால் நடந்த சம்பவத்தைப் புரிந்துகொள்ளவோ, அதனைத் தடுக்கவோ முடியாத நிலையில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பிறகு, 2024 செப்டம்பர் மாதம் சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

சிறுமி 18 வாரக் கர்ப்பமாக இருந்ததால், மருத்துவமனை சார்பில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் மாற்றாந்தந்தையே சிறுமியின் கர்ப்பத்திற்குக் காரணம் என்பது தெரியவந்தது. குழந்தை பிறந்த பின்னர் நடத்தப்பட்ட தந்தைமைப் பரிசோதனையும் இதனை உறுதிப்படுத்தியது.

 

சிறுமி குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், தற்போது அந்தக் குழந்தை வளர்ப்புப் பராமரிப்புக் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் வயது, அறிவுசார் குறைபாடு மற்றும் அவருக்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள் ஆகியவற்றை நீதிமன்றம் தண்டனை விதிக்கும்போது முக்கியமாகக் கருத்தில் கொண்டது.

இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 48 வயது ஆடவருக்கு 19 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனையும் 16 பிரம்படிகளும் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பற்ற சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட குற்றவாளிக்கு கடுமையான தண்டனை அவசியம் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.