சிங்கப்பூரில் திடீர் வெள்ளத்தைத் தடுக்க புதிய தொழில்நுட்பம்..! 45 இடங்களில் கண்காணிப்பு ஏற்பாடு!
சிங்கப்பூரில் ஆண்டு இறுதி வடகிழக்கு பருவமழைக் காலம் நெருங்கி வருவதால், சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், வெள்ளத்தைக் கண்காணிக்கவும், அவசர காலங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் புதிய தொழில்நுட்பங்களைப் பொதுப் பயன்பாட்டுக் கழகம் (PUB) சோதனை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தொலைவிலிருந்து இயக்கக்கூடிய சிறிய ரக நீர் இறைக்கும் வாகனம் சோதனை செய்யப்படுகிறது. ஒரே ஒருவர் இதனை இயக்க முடியும். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டு சென்று தண்ணீரை வெளியேற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தின் மூலம் ஐந்து மணி நேரத்திற்குள் ஒலிம்பிக் தரத்திலான ஒரு நீச்சல் குளத்தில் இருக்கும் அளவு தண்ணீரை வெளியேற்ற முடியும். மேலும், நிலத்தடி வாகன நிறுத்துமிடங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளிலும் இதனைப் பயன்படுத்த முடியும்.
இதனுடன், சாலைகளில் தேங்கும் நீரின் அளவை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் புதிய வெள்ள உணரிகளையும் PUB சோதித்து வருகிறது. வெள்ள அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் இதுபோன்ற 45 உணரிகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ள அபாயத்தை முன்கூட்டியே கண்டறிந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியும்.
இந்த உணரிகளை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள கண்காணிப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதற்கான வழிகளையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
தற்போது சிங்கப்பூர் முழுவதும் ரேடார், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நீர்மட்ட உணரிகள் அடங்கிய கண்காணிப்பு வலையமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வானிலை மற்றும் வெள்ள நிலவரங்களை நிகழ்நேரத்தில் கண்காணித்து, அபாயம் உள்ள பகுதிகளுக்கு விரைவான நடவடிக்கைக் குழுக்களை அனுப்ப முடிகிறது.
மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழலில் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாகச் செயல்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வையும் PUB ஏற்படுத்தி வருகிறது.
பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய திடீர் வெள்ள அபாயங்களைக் குறைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்தப் புதிய நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்.