ஆன்லைனில் பொருள் வாங்குகிறீர்களா? ஒரு சிறிய தவறு.. உங்கள் பணத்தையே இழக்க நேரிடலாம்!

ஆன்லைனில் பொருள் வாங்குகிறீர்களா? ஒரு சிறிய தவறு.. உங்கள் பணத்தையே இழக்க நேரிடலாம்!

இன்றைய டிஜிட்டல் உலகில் இணையம் வழியாகப் பொருள்களை வாங்குவது பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. பெரிய இணைய வர்த்தகத் தளங்கள் முதல் Carousell போன்ற இணையச் சந்தைகள் வரை பல்வேறு தளங்கள் மூலம் வீட்டிலிருந்தபடியே பொருள்களின் விலைகளை ஒப்பிட்டு, புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருள்களைக் குறைந்த விலையில் வாங்க முடிகிறது. ஆனால், இணைய வர்த்தகம் அதிகரித்து வரும் அதே வேளையில், இதனைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சந்தை விலையைவிட மிகவும் குறைந்த விலையில் பொருள்களை விற்பனை செய்வதாகக் கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சம்பவங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில மோசடிக்காரர்கள் உண்மையான விற்பனை விளம்பரங்களில் உள்ள புகைப்படங்களைப் பயன்படுத்தி போலியான கணக்குகளை உருவாக்குகின்றனர்.

பின்னர், அந்தப் பொருளை வாங்குவதற்கு பலர் ஆர்வமாக இருப்பதாகக் கூறி, உடனடியாக முன்பணம் செலுத்துமாறு வாடிக்கையாளர்களை வற்புறுத்துகின்றனர்.

இத்தகைய சூழ்நிலைகளில் அவசரப்பட்டு முடிவெடுக்காமல், விற்பனையாளரின் கணக்கு விவரங்கள், முந்தைய வாடிக்கையாளர் மதிப்பீடுகள் மற்றும் பரிவர்த்தனை வரலாறு ஆகியவற்றைச் சரிபார்ப்பது அவசியம். குறிப்பாக, புதிதாக உருவாக்கப்பட்ட கணக்குகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்ளும் விற்பனையாளர்களிடம் கூடுதல் கவனம் தேவை.

மேலும், இணையத்தில் பொருள்களை வாங்குபவர்கள் மட்டுமின்றி, விற்பனை செய்பவர்களும் மோசடிக்காரர்களின் இலக்காக மாறக்கூடும். ஒரு பொருளை வாங்க விரும்புவதாகத் தொடர்புகொள்ளும் நபர், பணத்தை ஏற்கெனவே செலுத்திவிட்டதாகக் கூறி, அதைப் பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட இணைய இணைப்பைத் திறக்குமாறு அறிவுறுத்தலாம். ஆனால், அந்த இணைப்பு போலியான இணையதளத்திற்குச் செல்ல வழிவகுத்து, வங்கிக் கணக்கு அல்லது வங்கி அட்டை விவரங்களைத் திருடுவதற்குப் பயன்படுத்தப்படலாம்.

எனவே, பணத்தைப் பெறுவதற்காக வங்கிக் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் அல்லது ரகசியத் தகவல்களை வழங்குமாறு யாராவது கேட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிமுகமில்லாத இணைய இணைப்புகளைத் திறப்பதையும் தவிர்க்க வேண்டும்.

அதேபோல், Carousell போன்ற வர்த்தகத் தளங்களில் நடைபெறும் உரையாடல்களை WhatsApp, Telegram போன்ற வெளிப்புறச் செயலிகளுக்கு மாற்றுமாறு சிலர் வற்புறுத்தலாம். அவ்வாறு மாற்றும்போது, சம்பந்தப்பட்ட வர்த்தகத் தளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்காமல் போகக்கூடும். மேலும், வாங்குபவர் அல்லது விற்பனையாளர் கூறுகிறார் என்பதற்காக அறிமுகமில்லாத செயலிகளைத் தொலைபேசியில் நிறுவுவதையும் தவிர்க்க வேண்டும்.

பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, சம்பந்தப்பட்ட இணைய வர்த்தகத் தளத்தின் அதிகாரப்பூர்வப் பணம் செலுத்தும் வசதிகளையும் வாங்குபவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பயன்படுத்துவது சிறந்தது. வெளிப்புற இணைய இணைப்புகள் மூலம் பணம் செலுத்துமாறு யாராவது கேட்டால், அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் எந்தவொரு தகவலையும் வழங்கக்கூடாது.

இணையத்தில் நல்ல சலுகை கிடைக்கிறது என்ற ஆசையில் அவசரப்பட்டு முடிவெடுப்பது நிதி இழப்புக்கு வழிவகுக்கலாம். எனவே, பொருளை வாங்குவதற்கு முன்பும் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு முன்பும் தேவையான சரிபார்ப்புகளை மேற்கொள்வது அவசியம்.

நிபுணர்களின் அறிவுரை: குறைந்த விலை, அவசரமாகப் பணம் செலுத்துமாறு வற்புறுத்துதல், வெளிப்புற இணைய இணைப்புகள் ஆகியவை மோசடிக்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் விழிப்புணர்வுடன் செயல்படுவதே பணத்தையும் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாக்கும் சிறந்த வழியாகும்.