சிங்கப்பூரில் ICA இணையச் சேவைகளில் பாதிப்பு..!! மைக்ரோசாஃப்ட் கோளாறால் விண்ணப்பங்களுக்குத் தாமதம்!
சிங்கப்பூரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உலகளாவிய சேவைத் தடங்கல் காரணமாக, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) சில இணையச் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் சேவைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயனர்களைப் பாதித்துள்ளது. குறிப்பாக Outlook உள்ளிட்ட மைக்ரோசாஃப்ட் சேவைகளைப் பயன்படுத்துவதில் பயனர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தப் பாதிப்பு சிங்கப்பூரின் சில அரசாங்கச் சேவைகளையும் எட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அரசாங்கத்தின் இணையவழிப் படிவத் தளமான FormSG மூலம் பொதுமக்கள் சமர்ப்பிக்கும் சில விண்ணப்பங்களுக்குப் பதிலளிப்பதில் தாமதம் ஏற்படலாம் என ICA தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நவம்பர் 13ஆம் தேதி ICA தனது Facebook பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் சேவைத் தடங்கல் காரணமாக FormSG வழியாகப் பெறப்படும் சில விண்ணப்பங்களை வழக்கமான நேரத்தில் செயல்படுத்த முடியாமல் போகலாம் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் சேவைகளில் ஏற்பட்டுள்ள கோளாறு சீராகும் வரை பொதுமக்கள் பொறுமையுடன் இருக்குமாறும், ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு ICA நன்றி மற்றும் புரிதலைத் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் ICA தொடர்பான சில இணையவழி விண்ணப்பங்களுக்குப் பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்பதால், அவசரத் தேவையுள்ளவர்கள் ICA Feedback அல்லது 6391 6100 என்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தித் தொடர்புகொள்ளலாம்.